200 ரூபாய் கடனுக்காக மதுக்கடை பார் ஊழியர் அடித்துக்கொலை வாலிபர் கைது
நன்மங்கலத்தில், 200 ரூபாய் கடனுக்காக பார் ஊழியரை அடித்துக்கொலை செய்த சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் வெள்ளைக்கல் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 62). இவர், நன்மங்கலத்தில் உள்ள மதுக்கடை பாரில் வேலை செய்து வந்தார். அதே பாரில் சப்ளையராக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வினோத்(23) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
வினோத்திடம், வேலாயுதம் ரூ.200 கடன் வாங்கியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு பாருக்கு வெளியே நின்றிருந்த வேலாயுதத்திடம் பணத்தை திருப்பித்தரும்படி வினோத் கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வினோத், அங்கிருந்த உருட்டுக்கட்டையால் வேலாயுதத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வேலாயுதம், விபத்தில் அடிபட்டதாக கூறி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்து என்பதால் இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். மேலும் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, வேலாயுதத்தை வினோத் உருட்டுக்கட்டையால் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது பற்றி பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேலாயுதம், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் வேலாயுதத்தை அடித்துக்கொன்றதாக வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.