விருதுநகர் அருகே லாரி மீது கார் மோதல், பங்குனி உத்திர விழாவுக்கு வந்த திருப்பூர் தம்பதி பலி - மகன் படுகாயம்
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு வந்த திருப்பூரை சேர்ந்த தம்பதி பலியானார்கள். காரை ஓட்டி வந்த அவர்களுடைய மகன் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்,
திருப்பூரில் பேக்கரி கடை நடத்தியவர் கோபால் யாதவ் (வயது 53). அவருடைய மனைவி கிருஷ்ணவேணி (48). இவர்களது மகன் சுடலைமணி (25). இவர்கள் 3 பேரும் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டுக்காக நெல்லை அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்திற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காரில் புறப்பட்டு வந்தனர். காரை சுடலைமணி ஓட்டினார்.
இந்த கார் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் நடுவப்பட்டி விலக்கு அருகில் நேற்று அதிகாலை சென்று கொண்டு இருந்தபோது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கியாஸ் சிலிண்டர் லாரி மீது திடீரென மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பேக்கரி அதிபர் கோபால்யாதவ், மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரை ஓட்டி வந்த சுடலைமணி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுடலைமணியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான கோபால்யாதவ், கிருஷ்ணவேணியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story