‘மு.க.ஸ்டாலின் தளபதியாக இருக்கலாம் தலைவராக முடியாது’ ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


‘மு.க.ஸ்டாலின் தளபதியாக இருக்கலாம் தலைவராக முடியாது’ ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 23 March 2019 5:00 AM IST (Updated: 23 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தளபதியாக இருக்கலாம், தலைவராக முடியாது என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. தலைமை தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறை ரோட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி, தேர்தல் பணிமனையை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்ததும் செயல்பாட்டுக்கு வரும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன்களை ரத்து செய்வதாக கூறி உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் அரசில் அவர்கள் இடம் பெற்றபோது, ஏன் செய்யவில்லை?

நாங்கள் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் மக்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கிறோம்.

தற்போது வியாபாரிகள், நிலவரி, வீட்டு வரி, கடைகளுக்கான வரியை அதிகமாக உயர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளனர். தேர்தல் முடிந்ததும் அதுபற்றி மறுபரிசீலனை செய்து, வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதை வேண்டுமானாலும் பேசலாம். அவரால் செயல்படுத்த முடியாது. அவர் என்றும் தளபதியாக இருக்கலாம். ஒரு நாளும் தலைவராக முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது, ‘7½ கோடி தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகவும், தேச பாதுகாப்புக்காகவும், பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும் என்கிறோம். ராகுல் பிரதமராக வேண்டும் என மு.க.ஸ்டாலின் மட்டுமே கூறுகிறார். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் எவரும் கூறவில்லை.

முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது தனியாக நின்று 37 தொகுதிகளை பெற்றார். தற்போது பலமான கூட்டணியை அமைத்து களத்தில் உள்ளதால் 40 தொகுதியையும் பெற வேண்டும். மெகா கூட்டணி என்பதற்காக, அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஊடகங்கள் ஆதரவு நமக்கு எதிராக உள்ளது. அவர்கள் கருத்தை எல்லாம், கருத்து கணிப்பு என வெளியிடுகின்றனர். அதைப்பற்றி கவலைப்படாமல், பணி செய்து வெற்றி பெறுவோம்’ என்றார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது, ‘அ.தி.மு.க., சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளது. தி.மு.க.வினர் ஊழல் கூட்டணியை அமைத்துள்ளனர். ஊழல் நிறைந்த கட்சிகள், அங்கு இடம் பெற்றுள்ளன. மு.க.ஸ்டாலினிடம் எந்த திட்டமும் இல்லாததால், முதல்-அமைச்சர் பழனிசாமி மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் தேர்தல் பணியை கவனிப்போம்’ என்றார்.

விழாவில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெகதீஷ், முருகுசேகர், பா.ஜ.க. நிர்வாகிகள், என்.பி.பழனிசாமி, ராஜேஸ்குமார், த.மா.கா. நிர்வாகிகள் ஆறுமுகம், விடியல் சேகர், எஸ்.டி.சந்திரசேகர், யுவராஜா, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கோபால், பா.ம.க. நிர்வாகி எம்.பி.வெங்கடாச்சலம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் மயில்துரையன், மாநகர செயலாளர் குணசேகரன், புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் ஐமன்னன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story