குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லை அடுத்து பொன்மாந்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் புதுப்பட்டி, சின்னபொன்மாந்துறை, எம்.ஜி.ஆர். நகர், நல்லேந்திரபுரம், டி.புதூர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பதினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளமே பொன்மாந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் 7 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் தற்போது ஒரு கிணற்றில் மட்டுமே தண்ணீர் உள்ளது. மற்ற கிணறுகள் வறண்டுவிட்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 நாட்களுக்கு ஒருமுறை அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த நீரில் உப்புத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் அதனை குடிநீராக அப்பகுதி மக்களால் பயன்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்தனர். அதையடுத்து தற்போது 60 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த கிராம மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தோல் தொழிற்சாலை காரணமாகவே நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொன்மாந்துறையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது தொடர்பாக ஊர்க்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொன்மாந்துறை, புதுப்பட்டி, சின்னபொன்மாந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் காலிக்குடங்களுடன் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஓரிரு வாரங்களுக்குள் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொன்மாந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானத்தில் கையொப்பம் இட்டனர்.
குடிநீர் பிரச்சினை குறித்து பொன்மாந்துறை பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பவுனம்மாள்:- தாமரைக்குளத்துக்கு குடகனாற்றில் இருந்து தான் தண்ணீர் வருகிறது. குடகனாற்றுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. தற்போது அணையை சுற்றி தடுப்பணைகள் அமைக்கப்பட்டுவிட்டது. இதனால் குடகனாற்றுக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் தாமரைக்குளமும் வறண்டுவிட்டது.
தற்போது 60 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் உள்ளது. அப்போது எங்களுக்கு 10 முதல் 15 குடங்கள் வரையே தண்ணீர் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் களுக்கு தினசரி 2 டம்ளர் அளவிலேயே குடிநீரை குடிக்க கொடுக்கிறோம். அப்போது தான் அடுத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் வரை குடிநீர் இருக்கும் என்றார். அவரை தொடர்ந்து அப்பகுதி மக்களும் இதே நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கிறது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
டோமினிக்:- எங்களின் முக்கிய நீராதாரம் தாமரைக்குளம் ஆகும். அது வறண்டுவிட்டதால் விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் நீரும் அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனை பயன்படுத்தினால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது.
எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர வேண்டும் என்றால் வைகை ஆற்று தண்ணீரை குடகனாற்றுக்கு வரும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க வேண்டும். அல்லது அமராவதி அணை, பரப்பலாறு, வரதமாநதி அணை, குதிரையாறு அணை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடகனாற்றுக்கு வரும் வகையில் வாய்க்கால் அமைக்க வேண்டும். பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள நிலங்களை வாய்க்கால் பணிக்காக அரசு கையகப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story