மாவட்ட செய்திகள்

மோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் + "||" + Complaints of fraud have been blocked by the financial company and the customers struggle

மோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்

மோசடி செய்ததாக புகார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்
நாகர்கோவிலில் முதிர்வடைந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதை மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவர் நடத்தி வருகிறார். இதன் கிளைகள் காஞ்சிபுரத்திலும், கேரள மாநிலத்தில் சில ஊர்களிலும் உள்ளன. இந்த நிதி நிறுவனம் மக்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தது.


அதைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக சேர்ந்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை ஒரு ஆண்டு முதல் 5½ ஆண்டு வரை செலுத்தி வந்தனர்.

அவ்வாறு பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு முதிர்வடைந்த பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு கொடுத்து விட்டு, மற்றவர்களுக்கு  கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சிலருக்கு நிதி நிறுவனத்தின் மூலம் கொடுத்த காசோலையும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இப்படியே பல மாதங்களாக வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு சென்று தங்களது பணத்தை கேட்டனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால் பணம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே 25–ந் தேதி (அதாவது நேற்று) வெட்டூர்ணிமடத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 200–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தங்களது பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நேற்று வெட்டூர்ணிமடத்தில் உள்ள நிதி நிறுவனத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு நிதி நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

முதிர்வடைந்த பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதோடு நிதி நிறுவனத்தின் முன் உள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, “நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் செலுத்தி வந்தோம். அந்த பணத்தை வைத்து தான் எங்கள் மகன் மற்றும் மகள் திருமணம், வீடு கட்டுவது என்று பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தோம். ஆனால் தற்போது எங்களது பணத்தை மோசடி செய்துவிட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டார்கள். நாங்கள் வாயை கட்டி, வயிற்றை கட்டி சேர்த்த பணத்தை இப்போது இழந்து விட்டோம். அதை எங்கு சென்று கேட்பது என்றே தெரியவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

இதைத் தொடர்ந்து நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்கள், நிதி நிறுவனம் தங்கள் பணத்தை மோசடி செய்ததாக புகார் கூறினார்கள். உடனே அவர் “போராட்டம் எதற்கும் தீர்வாகாது. நீங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகார் அளியுங்கள். அதன்பேரில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசாரின் வேண்டுகோளை ஏற்று வாடிக்கையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் புகார் கொடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.