கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் தம்பிதுரை, ஜோதிமணி மனுதாக்கல்


கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் தம்பிதுரை, ஜோதிமணி மனுதாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் தம்பிதுரை, ஜோதிமணி ஆகியோர் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி கரூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்புமனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கடந்த 19-ந்தேதியிலிருந்து அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 25-ந்தேதி அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திரளான தொண்டர்களுடன் மாவட்ட செயலாளரும், போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், நேற்று காலை வெங்கமேட்டிலிருந்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திறந்தவேனில் பேசியபடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். ஊர்வலமானது சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர், கரூர் பஸ் நிலையம், ஜவகர்பஜார், திண்டுக்கல் ரோடு, லைட்அவுஸ் கார்னர் வழியாக சுங்ககேட்டை அடைந்தது.

பின்னர் இந்த ஊர்வலம் தாந்தோன்றிமலை மெயின்ரோடு வழியாக சென்று 11.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து தம்பிதுரை உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு வந்திறங்கினர். பின்னர் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் (சுகாதாரத்துறை) உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மதியம் 12.10 மணியளவில் தம்பிதுரை மனுதாக்கல் செய்தார்.

அப்போது அவர், தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் முன்பு ஜனநாயகமுறைப்படி செயலாற்றுவேன் என்று வேட்பாளர் உறுதிமொழியினை ஏற்று கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தம்பிதுரைக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த தொண்டர்கள் நாளை நமதே... நாற்பதும் நமதே... என ஆதரவு கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியியில் சிறிது நேரம் அவர் பேசி ஆதரவு திரட்டினார்.

இதற்கிடையே நேற்று காலை கரூர் மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே தேர்தல் பணிமனையின் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் திரண்டிருந்த திரளான தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் 11.50 மணியளவில் ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நின்று கொண்டிருந்தனர். அ.தி.மு.க.வினர் மனுதாக்கல் செய்து விட்டு வந்த பிறகு வேட்புமனுதாக்கல் செய்யும் அறைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் நேரம் செல்ல செல்ல பொறுமையை இழந்த அவர்கள், உடனே முதல் மாடியிலுள்ள வேட்புமனுதாக்கல் செய்யும் அறையில் வெளிப்புறத்தில் வந்து நின்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அ.தி.மு.க.வினர் சென்று வந்த பிறகு உள்ளே செல்ல அனுமதிப்போம் என்று கூறி செந்தில்பாலாஜியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனுதாக்கல் செய்ய வந்திருக்கிறோம். இப்படி எங்களை தடுத்து நிறுத்தியதற்கு கோர்ட்டில் வழக்கு தொடருவேன் எனக்கூறி வாக்குவாதம் செய்தார்.

அந்த சமயத்தில் தம்பிதுரை உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் அறையில் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு தரப்பினரும் ஒரே இடத்துக்குள் நின்றதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தேர்தல் அதிகாரியின் அறையை விட்டு மற்றொரு அறைக்கு அ.தி.மு.க.வினர் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை சமாதானம் செய்த போலீசார், தேர்தல் அதிகாரியின் அறைக்குள் அவர்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அங்கிருந்து தம்பிதுரை உள்பட அமைச்சர்கள் வெளியே வந்து விட்டனர்.

பின்னர் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம், போலீசாரின் அடக்கு முறை குறித்து புகார் தெரிவித்ததோடு, இதனை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்துமாறு வலியுறுத்தினார். அப்போது “நோ கமாண்ட்ஸ்“ (எதுவும் பேசாதீர்கள்) செந்தில்பாலாஜி என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மதியம் 12.40 மணியளவில் ஜோதிமணி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தார். அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்ய வந்த சம்பவம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. 

Next Story