சேரம்பாடியில், விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
சேரம்பாடியில் விவசாய பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், விலக்கலாடி உள்பட பல பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு 4 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்தன. தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளையும் முற்றுகையிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. அப்பகுதியில் தொடர்ந்து நின்றிருந்த காட்டுயானைகள் விடியற்காலையில் அங்கிருந்து சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் ராபர்ட்வில்சன் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் காட்டுயானைகள் நிற்கும் இடத்தை தேடி சென்றனர். அப்போது வனப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. இதனால் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தட்டாம்பாறை, முருக்கம்பாடி, கோட்டப்பாடி பகுதியில் 7 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story