பல்லடம் போக்குவரத்து கழக கிளை முன்பு டிரைவர் தர்ணா போராட்டம்
பல்லடம் போக்குவரத்து கழக கிளை முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பல்லடம்,
பல்லடம் வடுகபாளையம் உடுமலை ரோட்டில் வசித்துவருபவர் யாகூப் (வயது 56). இவர் பல்லடம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இலகுபணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் போக்குவரத்து கழகத்தின் மக்கள் நேசம் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க பேரவையின் மாநில தலைவராகவும் உள்ளார்.
இவர் திருப்பூர்–பூண்டி வழித்தடத்தில் செல்லும் நகர பஸ் கண்டக்டர் கந்தசாமியின் வழிவசூல் தாளில் உள்ள குறைபாடு சம்பந்தமாக பல்லடம் கிளை மேலாளர் சாமிநாதனை சந்திக்க சென்றார். அப்போது அங்கிருந்த மற்றொரு கண்டக்டர் சதீஷ்குமாருக்கும், யாகூப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே கிளை மேலாளர் இருவரையும் வெளியே செல்லுமாறு கூறினார்.
இதனையடுத்து தன்னை கண்டக்டர் மற்றும் கிளைமேலாளர் ஆகியோர் தரக்குறைவாக பேசியதாக யாகூப் பல்லடம் போக்குவரத்து கழக கிளை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்குள்ள தொழில்நுட்ப அதிகாரி வேலுசாமி, யாகூப்பை சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.