திருவண்ணாமலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப்பந்தயம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் கலெக்டர் பங்கேற்பு
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர். இதில் கலெக்டரும் அலுவலர்களுடன் பங்கேற்று ஓடினார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் வருகிற 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் திருவண்ணாமலை இளம் தளிர் அமைப்பு ஆகியவை இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு தொடங்கிய மாரத்தான் கோட்டி சுமார் 14 கிலோ மீட்டர் உள்ள கிரிவலப்பாதை வழியாக அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து, அவரும் இதில் கலந்து கொண்டு ஓடினார்.
மேலும் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளிகளின் ஆய்வாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்களும் பங்கேற்று ஓடினர்.
இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்களில் முதலிடம் பெற்றவருக்கு மோட்டார் சைக்கிளும், பெண்களில் முதலிடம் பெற்றவருக்கு மொபட்டும் வழங்கப்பட்டது. பரிசுகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். போட்டியில் இளம் தளிர் அமைப்பை சேர்ந்த விஜயக்குமார், கோபி, மணிஷ், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.