‘ஆரூரா..., தியாகேசா...’ பக்தி கோ‌ஷம் விண்ணதிர முழங்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்


‘ஆரூரா..., தியாகேசா...’ பக்தி கோ‌ஷம் விண்ணதிர முழங்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
x
தினத்தந்தி 1 April 2019 10:30 PM GMT (Updated: 1 April 2019 7:02 PM GMT)

‘ஆரூரா... தியாகேசா...’ என்ற பக்தி கோ‌ஷங்கள் விண்ணதிர முழங்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் சைவ திருக்கோவில்களில் தோன்றிய வரலாறு கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோவில். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோ‌ஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்றது.

இந்த கோவிலின் சிறப்புக்கு மணி மகுடமாக திகழ்வது ஆழித்தேர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற பெருமைமிக்கது. ஆழித்தேரை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தி சுந்தரர் பார்த்து பரவசம் அடைந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஆழித்தேரோட்டம்

பங்குனி உத்திர திருவிழா நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 25–ந் தேதி இரவு தியாகராஜர் சாமி அஜபா நடனத்துடன் கோவிலில் புறப்பட்டு ஆழித்தேரில் எழுந்தருளினார். அவருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் தேர்களில் எழுந்தருளினர். நாள்தோறும் தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேராட்ட விழா நடந்தது. முன்னதாக தேரடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை நடந்தது. சரியாக 7.15 மணிக்கு வாணவெடிகள் முழங்கிட தேரோட்டம் தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், போலீஸ் சூப்பிரண்டு துரை, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞானமகா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட நீதிபதி கலைமதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன், செயல் அதிகாரி கவிதா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஆரூரா..., தியாகேசா....’ என பக்தி கோ‌ஷங்கள் விண்ணதிர முழங்கி உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் பின்புறம் 2 புல்டோசர்கள் சக்கரங்களை தள்ளிவிட, மெதுவாக சக்கரங்கள் சுழன்று நிலையை விட்டு ஆடி அசைந்து புறப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது கண் கொள்ள காட்சியாக இருந்தது.

விழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் சாலைகளில் மட்டுமின்றி கட்டிடங்களின் மாடி பகுதிகளில் நின்று தேரோட்டத்தின் அழகை கண்டு ரசித்தனர்.

தேருக்கு முன்னாள் பக்தர்கள் மேளதாளங்களுடன், மங்கள வாத்திய இசைகளை முழுங்கியபடி சென்றனர். பின்னால் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ வாகனமும், முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் ஆகியவை தேரை பின் தொடர்ந்து வந்தன.

தேரை சுற்றி கயிறுகளால் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரை இழுக்கும்போது பச்சை கொடியும், நிறுத்துவதற்கு சிவப்பு கொடியும் ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு வழிகாட்டப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்தபட்டது.

தேரோட்ட விழாவையொட்டி ‘‘தினத்தந்தி’’ நாளிதழ் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர்மோர், குடிநீர், உணவு வழங்கப்பட்டன. திருவாரூர் நகராட்சி சார்பில் தேரோடும் நான்கு வீதிகளிலும் துப்பரவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் தூய்மை பணிகள் செய்யப்பட்டன. மேலும் குடிநீர் தொட்டி, தற்காலிக கழிவறை வசதி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுத்திட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தேரோட்ட விழாவில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் சி.பாலமுருகன், பாரத் டி.வி.எஸ். உரிமையாளர் ஆர்.பிரபாகரன், பி.கார்த்திகேயன் ஸ்டீல் உரிமையாளர் கே.அன்புசெல்வன், ஸ்ரீவிநாயகர் ஸ்டீல் பர்னிச்சர் உரிமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், ஜெயலெட்சுமி என்ஜினீயரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் பி.ஆர்.ராஜ்மோகன், மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் வி.ஆர்.என் பன்னீர்செல்வம், எஸ்.வி.டி. உரிமையாளர்கள் ஜெ.கனகராஜன், ஜெ.ரவிச்சந்திரன், என்.ஜெய்கணேஷ், கே.எஸ்.கே. முருகேசன் அன் சன்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் முருகேசன், செல்வம், செந்தில், பாலாஜி மில் ஸ்டோர்ஸ் உரிமையாளர் செந்தில்நாதன், சேகர் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் சேகர்கலியபெருமாள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story