பட்டுக்கோட்டை பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


பட்டுக்கோட்டை பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 4 April 2019 3:30 AM IST (Updated: 4 April 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம், குறிச்சி திருச்சிற்றம்பலம், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர் தம்பிக்கோட்டை, நம்பிவயல், ஆண்டிக்காடு ஆகிய 10 வருவாய் சரகங்கள் உள்ளன.

இந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. பல குளங்கள் ஆக்கிரமிப்புகளால் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஒரு காலத்தில் முப்போகம் சாகுபடி நடைபெற்ற பட்டுக்கோட்டை தாலுகாவில் கடந்த 10 ஆண்டுகளாக காவிரி நீர் ஏமாற்றியதால் ஒரு போகம் கூட சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எள், சோளம், கேழ்வரகு போன்ற புன்செய் சாகுபடியும் குறைந்து விட்டது.

கானல் நீர்

இதனால் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூர் போன்ற வெளிமாவட்டங்களுக்கு வேலை தேடி சென்று விட்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின் படி பட்டுக்கோட்டை தாலுகாவில் 70 ஏரிகளும், 450-க்கும் மேற்பட்ட குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் விட்டதாக அரசு கணக்கில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயலுக்கு பிறகு இதுவரை மழைத்தூறல் கூட இல்லை. இதனால் காணும் இடம் தோறும் கானல் நீர்தான் தெரிகிறது. கடந்த ஆண்டு இருந்த நிலைதான் இப்போதும் உள்ளது. 95 சதவீதம் ஏரி குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 100 டிகிரியைத் தாண்டி வெயில் அடிப்பதால் அனல்காற்று வீசுகிறது. காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது.

தென்னை சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாகுபடியில் முதலிடத்திலிருந்த பட்டுக்கோட்டை பேராவூரணி தாலுகாக்கள் கஜாபுயல் காரணமாக 85 சதவீத தென்னை மரங்களை இழந்து நிற்கும் நிலையில் தற்போது அனல் காற்று வீசுவதால் எஞ்சிய தென்னை மரங்களையும் இழந்து விடுவோமோ என்று தென்னை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி விட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதன் காரணமாக கிராமப் புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆடு மாடுகள் குடிக்க கூட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாதநிலை ஏற்படும்நிலை உள்ளது.

ஆழ்குழாய் கிணறு

பட்டுக்கோட்டை தாலுகாவில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளிலும், மதுக்கூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த குடிநீர் தொட்டிகளுக்கு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.

வறண்டு போய் கிடக்கும் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி ஆழப்படுத்தி பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நீரை நீண்டகாலத்துக்கு தேக்கி வைக்க வேண்டும். காட்டாறுகளில் இருந்து கடலில் வீணாக கலக்கும் நீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீரை சேமித்து வைக்க வேண்டும். காட்டாறுகளிலிருந்து நீரேற்றும் நிலையம் மூலம் ஏரி, குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story