திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 5 April 2019 3:45 AM IST (Updated: 5 April 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் 2 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள வேலஞ்சேரியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் குடிநீர் கிடைக்காததால் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்றும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று காலிகுடங்களுடன் திருத்தணி- நாகலாபுரம் சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல திருத்தணியை அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தை சேர்ந்த தாழவேடுவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டது. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை திருத்தணி-நாகலாபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த திருவாலங்காடு ஒன்றிய அலுவலர்கள் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் தொடர்ந்து சாலைமறியல் நடத்தப்பட்டதால் திருத்தணி- நாகலாபுரம் நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story