ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க கூடாது தோட்ட தொழிலாளர்களுக்கு, கலெக்டர் அறிவுரை


ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க கூடாது தோட்ட தொழிலாளர்களுக்கு, கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 11:05 PM GMT)

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க கூடாது என்று நெல்லியாளம் தோட்ட தொழிலாளர்களுக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை வழங்கினார்.

பந்தலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-4 ஒன்பது லைன்ஸ் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நேற்று மதியம் 12 மணிக்கு நடத்தப்பட்டது. முகாமை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க கூடாது. மேலும் ஓட்டு போட்டதை உறுதி செய்ய நவீன எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வாக்கு எந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம், சின்னம் இடம் பெற்று இருக்கும். நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு பொத்தானை அழுத்தி ஓட்டு போட வேண்டும். ‘பீப்‘ சத்தம் வந்த பிறகு அங்கிருந்து செல்ல வேண்டும். எனவே விழிப்புடன் அனைவரும் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு போடுவது குறித்து தோட்ட தொழிலாளர்களுக்கு கலெக்டர் செயல்முறை விளக்கம் அளித்தார். பின்னர் தொழிலாளர்களுடன் அமர்ந்து கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் தேநீர் அருந்தினர். முகாமில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரமங்கலம், பொறியாளர் கிருஷ்ணபிரகாஷ், தேயிலை தோட்ட கோட்ட மேலாளர் புஸ்பராணி, வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகோபால், யுவராஜ், அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீஜா வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story