பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.65 லட்சம் தங்க விநாயகர் சிலைகள் சிக்கின வாலிபர் கைது


பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.65 லட்சம் தங்க விநாயகர் சிலைகள் சிக்கின வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 7 April 2019 7:02 PM GMT)

பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலைகளை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து டெல்லி வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற ராஜலிங்கம் மகிந்தன்(வயது 30) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் தலா 1 கிலோ எடை கொண்ட சிறிய அளவிலான 4 வெள்ளி விநாயகர் சிலைகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அதனை உரசி பார்த்தபோது, அவை 12 காரட் தங்கத்தால் ஆன விநாயகர் சிலைகள் என்பதும், அதில் வெள்ளி முலாம் பூசி கடத்தி வந்ததும் தெரிந்தது.

அவரிடம் இருந்து 4 கிலோ எடை கொண்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, பாரீசில் உள்ள தனது நண்பர் ஒருவர் அதை தன்னிடம் கொடுத்ததாகவும், சென்னைக்கு கொண்டு சென்றவுடன் விமான நிலையத்தில் வந்து அதை ஒருவர் வாங்கிக்கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜலிங்கம் மகிந்தனை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த தங்க விநாயகர் சிலைகளை சென்னை விமான நிலையத்தில் வாங்க இருந்தவர் யார்? எனவும் விசாரித்து வருகின்றனர்.

Next Story