பாதுகாப்பான நாடு அமைய மத்தியில் பா.ஜ.க. தான் வரவேண்டும் ஜி.கே.வாசன் பேச்சு


பாதுகாப்பான நாடு அமைய மத்தியில் பா.ஜ.க. தான் வரவேண்டும் ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 7:48 PM GMT)

பாதுகாப்பான நாடு அமைய மத்தியில் பா.ஜ.க. தான் வரவேண்டும் என்று கீழப்பழுவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

கீழப்பழுவூர்,

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சந்திரசேகரை ஆதரித்து கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

காமராஜரின் மறைவுக்கு பின் இந்த அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா மட்டுமே வழங்கி உள்ளார். இன்னும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி மத சார்பின்மை கட்சி என்று கூறிக்கொள்கின்றனர்.

அப்படி ஒரு மதச்சார்பின்மையற்ற கட்சி எதற்காக தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட சிறுபான்மையினரை சேர்ந்த வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாடு அடைந்த வளர்ச்சியை விட கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் நாடு பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. பாதுகாப்பான நாடு அமைய மத்தியில் பா.ஜ.க. தான் வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இதுவரை அரியலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு கூறினார். இன்னும் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களைப் பற்றியும் தெரிவித்து வாக்கு சேகரித்தார். இப்பிரசாரத்தில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இளவரசன், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் த.மா.க. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story