தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து பொதுமக்கள் ஏமாறக்கூடாது குமாரபாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து பொதுமக்கள் ஏமாறக்கூடாது குமாரபாளையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 4:45 AM IST (Updated: 9 April 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து பொதுமக்கள் ஏமாறக்கூடாது என்று குமாரபாளையத்தில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நாமக்கல், 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். அவருடன் வேட்பாளர் மணிமாறன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரும் திறந்த வேனில் உடன் இருந்தனர்.

இந்த பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மத்தியில் நிலையான ஆட்சி வரவேண்டும் என்பதற்காக நாம் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும். மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற முடியும்.

இந்த தேர்தலில் தி.மு.க. அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. வைகோ, தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று ம.தி.மு.க.வை தொடங்கினார். இப்போது மீண்டும் தி.மு.க.வுடன் சேர்ந்துள்ளார். இந்த தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர், தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர்களுக்கு கொள்கை இல்லை. எனவே தான் சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறேன்.

தேர்தல் விதிமுறைப்படி ஒரு கட்சியில் சேர்ந்தால் தான் அந்த கட்சி சின்னத்தில் போட்டியிட முடியும். எனவே தான் எல்லோரும் கட்சி மாறி நிற்கிறார்கள். தி.மு.க. உறுப்பினர் ஆனால் தான் அந்த கட்சி சார்பில் போட்டியிட முடியும். எனவே இந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை, ம.தி.மு.க. வேட்பாளர் என்று சொல்லமுடியும். இதுபோன்ற தில்லுமுல்லு இருப்பதால் தான் அவர்கள் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறேன்.

தி.மு.க. அதிகாரத்துக்கு வர துடித்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மத்தியில் தி.மு.க. கூட்டணி அமைந்த போது, கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்கள் ஒவ்வொரு முறையும் பதவிக்காகவே மத்திய அரசிடம் பேசி வந்தனர். தமிழக மக்களுக்கு என்று அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் கேட்டு பெறவில்லை. அவர்களின் 15 ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் ஏதாவது தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்களா? என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேரும் காவிரி நதி நீர் பிரச்சினைக்காக 21 நாட்கள் நாடாளுமன்றத்தில் அவையை முடக்கினர். அப்போது மக்கள் வியப்புடன் பார்த்தனர். தி.மு.க. எம்.பி.க்கள் இவ்வாறு குரல் கொடுத்தார்களா? கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வந்தபோது, அரசிதழில் (கெஜட்டில்) வெளியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. எதுவும் செய்யவில்லை.

இதற்கிடையே கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. அதனால் 10 ஆண்டுகளாக நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இதற்கு தி.மு.க. தான் காரணம். ஆனால் நமது அரசு நல்ல தீர்ப்பை பெற்றதன் மூலம் காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் முறைப்படுத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைத்து வருகிறது.

ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தால் அவர் கடமையை செய்ய வேண்டும். ஆனால் தி.மு.க.வினர் அவ்வாறு செய்யவில்லை. தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தார். ஆனால் தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி பணிகளையும் அவர் செய்யவில்லை. எனவே கடந்த காலத்தை பொதுமக்கள் எண்ணிபார்க்க வேண்டும். நமது கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் நாம் கேட்கும் நிதி தமிழகத்திற்கு கிடைக்கும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அனைத்தையும் நாம் நிறைவேற்றி வருகிறோம். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் சட்டசபை தேர்தலை போன்று மு.க.ஸ்டாலின் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளார். ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து பொதுமக்கள் ஏமாறக்கூடாது. அது பொய்யான தேர்தல் அறிக்கை. எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஓட்டை பெறுவதற்காகவே, தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறையில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் உயர்கல்வியில் நாம் தற்போது முதலிடத்தில் உள்ளோம்.

2006-11-ம் ஆண்டில் கடுமையான மின்வெட்டு நிலவியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மற்றும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என கூறினார். அதன்படி மின்வெட்டு இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்கினார்.

அப்போது தமிழகத்தில் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட்டாக இருந்தது. எங்களின் நிர்வாக திறனால் தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி 16 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதற்காக நாம் மத்திய அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளோம்.

நான் கடந்த 20 நாட்களாக 32 நாடாளுமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். சென்ற இடம் எல்லாம் மக்கள் வெள்ளம் அதிகளவில் உள்ளது. மிகப்பெரிய அளவில் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வருகிறார். எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார். தமிழக அரசு உள்ளாட்சி துறையில் மட்டும் 20 விருதுகளை பெற்றுள்ளது. 2 கைகளை இழந்த நபருக்கு அவருக்கு பொருத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக, தமிழக அரசு ஆஸ்பத்திரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் காவல் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதல் காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்கிறார். சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றால் எப்படி விருது வாங்க முடியும்.

அ.தி.மு.க. பற்றி தி.மு.க.வினர் பல்வேறு குறைகளை கூறி வருகிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் கடைகளுக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபடுவது, ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என்று பல்வேறு குற்றங்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக நமது அரசு திகழ்ந்து வருகிறது.

குமாரபாளையம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. எனவே ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மணிமாறனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வையுங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த பிரசாரத்தில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, குமாரபாளையம் நகர அ.தி.மு.க. செயலாளர் நாகராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story