மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் அமைந்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக இந்த கோவில் கருதப்படுகிறது. இங்கு பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவ பெருமாள் அருள்பாலிக்கிறார். உற்சவராக ராஜகோபாலசாமி, ருக்மணி, சத்யபாமாவுடன் மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தாயார் சன்னதியில் மூலவராக செண்பகலட்சுமி தாயாரும், உற்சவராக செங்கமலத்தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் பிரம்மோற்சவமும், அதனை தொடர்ந்து 12 நாள் விடையாற்றி விழாவும் நடைபெறுவது வழக்கம்.

பங்குனி பிரம்மோற்சவத்தின்போது நடக்கும் வெண்ணெய்த்தாழி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை கண்ணனாக தவழும் கோலத்தில் பல்லக்கில் வீதி உலா வரும் ராஜகோபாலசாமி மீது வெண்ணெய்யை தெளிப்பார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான பங்குனி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடந்தது.

உற்சவத்தின் தொடக்கமாக காலை 7.30 மணி அளவில் ராஜகோபாலசாமி தவழும் குழந்தை கண்ணனாக கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். ராஜகோபாலசாமி பல்லக்கு ராஜகோபுரம் வழியாக கருடஸ்தம்பம் சென்றடைந்தது. பின்னர் கோபாலசமுத்திரம் கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி வடக்கு வீதி, மேலராஜவீதி, காமராஜர் வீதி, பெரியகடைத்தெரு, பந்தலடி, காந்திசாலை வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபம் வரை வீதிஉலா நடந்தது.

வீதி உலாவின்போது சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய்யை பல்லக்கில் வீற்றிருந்த ராஜகோபாலசாமி மீது தெளித்தனர்.

உற்சவத்தில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ராஜகோபாலசாமியை தரிசனம் செய்தனர். வீதி உலாவின்போது நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள், நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி பல்லக்கை பின் தொடர்ந்து சென்றனர்.

அரசு, தனியார் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் நீர் மோர், பானகம், குளிர்பானங்கள், விசிறி, உணவு பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மதியம் 3 மணி அளவில் வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் இரவில் வெட்டுங்குதிரை வாகனத்தில், வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீதி உலா சென்றார். அப்போது பந்தலடி அருகே வாணவேடிக்கை நடந்தது.

பங்குனி பிரம்மோற்சவத்தில் இன்று(புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 

Next Story