அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு வராது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு வராது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 10 April 2019 4:30 AM IST (Updated: 10 April 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூறினார்.

சிவகாசி,

மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த மெகா கூட்டணியை கண்டு அஞ்சி வருகிறார். இந்த கூட்டணியில் பிளவு வராதா என்று எதிர்பார்க்கிறார். அவர் போடுவது தப்பு கணக்கு. இந்த கூட்டணியில் இருந்து எந்த கட்சியையும் பிரிக்க முடியாது. நட்பு ரீதியாக, மானசீகமாக ஏற்பட்டது இந்த மெகா கூட்டணி. கூட்டில் கல் எறிந்து தேனீகூட்டை கலைப்பதுபோல் கலைத்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அது நடக்காது.

மோடி வாயால் வடை சுடுகிறார் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவர் சொல்வது போல் வடை சுட்டாலும் அது யாருக்காவது பயன்படும். தி.மு.க. வினர் வடையை சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் போகிறார்கள். பணத்தை கேட்டால் மூக்கில் குத்துகிறார்கள். அழகுநிலையத்துக்கு சென்று அங்குள்ளவர்களிடம் மாமூல் கேட்கிறார்கள். கொடுக்க மறுத்தால் வன்முறையில் இறங்குகிறார்கள். இதுபோல் ஒரு அ.தி.மு.க. தொண்டனை ஸ்டாலின் சொல்ல முடியுமா? கட்டப்பஞ்சாயத்து செய்யும் தனது கட்சி தொண்டர்களை ஸ்டாலின் ஊக்குவிக்கிறார்.

இந்த தேர்தல் யுத்தத்தில் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். ஆவியும், காவியும் சேர்ந்த கூட்டணி என்று இந்த மெகா கூட்டணியை பார்த்து கி.வீரமணி சொல்கிறார். ஆனால் தி.மு.க. கூட்டணி பாவிகள் சேர்ந்த கூட்டணி. நாங்கள் அப்பாவி கூட்டணி. நல்ல மனிதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். அங்கு கடவுளை விமர்சிப்பவர்கள் தான் இருக்கிறார்கள். எங்களுக்கு அனைத்து மதமும் ஒன்று தான்.

பெரியார் சிலையை அவர்களே உடைத்துவிட்டு வேறு சிலர் மீது குற்றம்சாட்டுகிறார்கள். கிருஷ்ணரை பற்றி வீரமணி பேசியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திசை திருப்பவே அந்த கட்சியினர் இப்படி நாடகம் ஆடுகிறார்கள். இந்த தேர்தல் யுத்தத்தில் நரேந்திர மோடியோடு, அர்ச்சுனனாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்த யுத்தத்தில் பாண்டவர்கள் அணி தான் வெற்றி பெறும். 8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாக சிலர் கூறுகிறார்கள். மீண்டும் மக்களை சந்தித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்பார். மக்களுக்கு வேண்டாத எந்த திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படமாட்டாது.

தி.மு.க. வன்முறை கட்சி, அதனுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும் தற்போது வன்முறை பாதையில் செல்கிறது. பத்திரிகையாளர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக தாக்குகிறார்கள். இவர்கள் எதிர்க் கட்சியாக இருக்கும்போதே இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். மாணிக்கம்தாகூருடன் வருபவர்கள் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கிடையாது. அவர்கள் அனைவரும் தஞ்சை, புதுக்கோட்டை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பதில் அளிக்கும் வகையில் வாக்காளர்கள் மாணிக்கம்தாகூருக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவர் ஆலோசனையின்பேரில் தான் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் பிரசாரம் செய்யவில்லை என்பதால் பின்னடைவு ஏற்படாது.

 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story