திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்


திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 10 April 2019 7:26 PM GMT)

திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே கிடங்கல், ஆக்கூர், பிள்ளைபெருமாள்நல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், சிங்கனோடை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் செங்கற்கல் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் தயாரிக்க கோடைக்காலம் ஏற்றக்காலமாகும். வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தொழிலாளர்கள் அதிகளவில் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதிகளில் தற்போது செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் கிராமத்தை சேர்ந்த செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

தை மாதத்தில் இருந்து ஆடி மாதம் வரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற காலமாக உள்ளது. தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து புழுதி மண் அதிகமாக கிடைக்கிறது. இந்த மண்ணோடு ஆற்றில் இருந்து எடுக்க கூடிய சவுடு மண்ணை கலந்து பதப்படுத்துவோம். பின்னர் அச்சுகளில் போட்டு செங்கற்களை வார்த்து எடுத்து வெயலில் நன்கு காய வைப்போம். அதன் பின்னர் காய வைத்த செங்கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீமூட்டி வேக வைப்போம். மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சில சமயம் கோடை மழை பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்பாய்களை பயன்படுத்தி செங்கற்களை மூடி வைப்போம். ஆனாலும் மழைநீர் சூழ்ந்த செங்கற்கள் கரைந்துவிடுகிறது. தற்போது செங்கல் தயாரிக்க ஏற்ற மண்ணும் சரிவர கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும், மழைக்காலத்தில் செங்கல் தயாரிப்பு பணி இல்லாததால் அப்போது செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story