“தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்” தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


“தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்” தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2019 11:38 PM GMT (Updated: 10 April 2019 11:38 PM GMT)

‘தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்‘ என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலையில் தூத்துக்குடி அருகே உள்ள புல்லாவெளி பகுதியில் உள்ள உப்பளத்துக்கு சென்றார். அங்கு உப்பளங்களில் பணியாற்றி கொண்டு இருந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார். உப்பள தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள், அதனை களைவதற்கான வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். உப்பள தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்களின் பணிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு உப்புகளை தனது கையால் எடுத்துக் கொடுத்து உதவிகளை செய்தார். தொடர்ந்து தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் தூத்துக்குடி அம்பேத்கர் நகர், திரேஸ்புரம், பூபாலராயர்புரம் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜனதா கட்சி இந்த தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஏனென்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் வெற்று பேச்சு. மு.க.ஸ்டாலின் நாகரிகம் கடந்து பேசுகிறார். பிரதமர் மோடியை உலகம் முழுவதும் வரவேற்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் அவர் உளறிக்கொண்டு இருக்கிறார். நதிகள் இணைக்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். பா.ஜனதா, அ.தி.மு.க. அரசு நல்ல திட்டங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திட்டம் கிடைக்க வேண்டும் என்று தான் பணியாற்றி வருகிறார். நாம் இங்கே நிம்மதியாக இருப்பதற்கு பிரதமர்தான் காரணம்.

பா.ஜனதா, அ.தி.மு.க. நேர்மறையான அரசியலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் தூத்துக்குடியில் பேசிய மு.க.ஸ்டாலின் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இல்லாமல், மறுபடி, மறுபடியும் ஒரு போராட்ட களமாகவே சித்தரித்துக் கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மக்கள் வளர்ச்சி அடைய வேண்டாமா?. தூத்துக்குடி மக்களுக்கு எல்லா தொழிற்சாலைகளும் கிடைக்க வேண்டாமா?. தூத்துக்குடியை எதிர்மறையாகவே சித்தரித்துக் கொண்டு இருந்தால், இந்த மக்களுக்கு நிச்சயமாக வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பது அரிதாகும். தூத்துக்குடியில் சங்கு அதிக அளவில் கிடைக்கிறது. அதனை எடுத்து மேற்கு வங்கத்துக்கு கொடுக்கிறோம். எங்களுக்கு பொருளாதாரம் கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story