சேலத்தில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


சேலத்தில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 April 2019 11:30 PM GMT (Updated: 11 April 2019 5:35 PM GMT)

சேலத்தில் இன்று ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். இதையொட்டி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். காலையில் கிருஷ்ணகிரியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராகுல்காந்தி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் ஒரே மேடையில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர்.

ராகுல்காந்தி வருகையையொட்டி தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், பல்வேறு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேலத்தில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவர்கள் பொதுக்கூட்ட மேடை, காமலாபுரம் விமான நிலையம், ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் உடையாப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனிடையே நேற்று காலை காமலாபுரம் விமான நிலையம் மற்றும் உடையாப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு ‘காண்வாய்‘ ஒத்திகை நடந்தது. இதுதவிர பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானம் முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது. ராகுல்காந்தி வருகையையொட்டி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story