தேசத்துரோக சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறும் காங்கிரசை மன்னிக்கவே முடியாது பெங்களூருவில், பிரதமர் மோடி பேச்சு


தேசத்துரோக சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறும் காங்கிரசை மன்னிக்கவே முடியாது பெங்களூருவில், பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 12:28 AM GMT (Updated: 14 April 2019 12:28 AM GMT)

தேசத்துரோக சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறும் காங்கிரசை மன்னிக்கவே முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது, பெங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. மோடி ஆட்சியில் இத்தகைய சம்பவங்கள் நடந்ததா?. நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் வழங்கிய ஆதரவால் தான் இதை செய்ய முடிந்தது. நான் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தேனோ அது உங்களின் ஆதரவால் சாத்தியமாயிற்று.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்தினோம். துல்லிய தாக்குதல் நடத்தினோம். இப்போது செயற்கைகோளை அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தினோம். இத்தகைய முடிவுகளை நாங்கள் நாட்டின் நலன் கருதி எடுத்தோம்.

நமது நாட்டின் பலத்தை வெளிப்படுத்தினால், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயம் என்று சொல்கிறார்கள். ரகசியமாக வைக்கப்பட்டதால், நமது நாடு பின்தங்கிய நிலையில் இருந்தது. இந்த நடவடிக்கைகளை காங்கிரசார் சகித்துக்கொள்ள முடியவில்லை.

செயற்கைகோள் தாக்குதல் சோதனை நடத்தியது நமக்கு பெருமை, கர்வம் இல்லையா?. காங்கிரஸ் ஆட்சியில் ரஷியாவை தவிர உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன. மோடி ஆட்சி வந்த பிறகு சீனாவை தவிர உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் நின்றுள்ளன.

இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை. காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என்று சொல்கிறார்கள். டெல்லியில் ஒரு பிரதமர், காஷ்மீருக்கு ஒரு பிரதமரா?.

காஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதாகவும், தேசத்துரோக சட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அது ஒரு பொய்யான அறிக்கை. இவற்றை பார்க்கும்போது, நாட்டை பாதுகாக்கும் மனநிலையில் காங்கிரஸ் இருப்பதாக தெரியவில்லை.

பாகிஸ்தானில் பணம் பெற்றுக்கொண்டு, ராணுவ வீரர்களை கல்வீசி தாக்குபவர்களை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறதா?. இத்தகைய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். அக்கட்சியின் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

தேசத்துரோக சட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறும் காங்கிரசை மன்னிக்கவே முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலங்களில் ராணுவ நினைவு தூண் அமைக்கப்படவில்லை. மோடி ஆட்சியில் அந்த நினைவு தூணை அமைத்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு ‘புல்லட் புரூப்’ ஜாக்கெட் கூட வழங்கவில்லை. ஏன் அப்போதும் அரசிடம் பணம் இருக்கவில்லையா?.

நாட்டில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டுள்ளது. இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 6 கோடியில் இருந்து 50 கோடியாக அதிகரித்துள்ளது. இணையதள கட்டணமும் மிக குறைவாக உள்ளது.

நடுத்தர மக்களின் நலனுக்காக வீட்டு கடனுக்கான வட்டியில் நாங்கள் மானியம் வழங்குகிறோம். ஆனால் அந்த நடுத்தர மக்கள் மீது அதிக வரியை சுமத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் முதல்-மந்திரி, சூப்பர் முதல்-மந்திரியாக இருக்கிறார்கள்.

இங்கு நடைபெறுவது, 20 சதவீத ‘கமிஷன்’ அரசு ஆகும். வருமான வரித்துறையினர் தங்களின் பணியை செய்கிறார்கள். சோதனை நடந்தால் ஏன் அலறுகிறீர்கள். தவறு செய்யவில்லையெனில் எதற்காக பயப்படுகிறீர்கள். யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான்.

நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணை குழு முன்பு ஆஜராகி, மணிக்கணக்கில் கேள்விகளுக்கு பதிலளித்தேன். தவறு செய்யாதபோது பயம் எதற்கு?. இவ்வாறு மோடி பேசினாா்.

இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக மோடி வாக்கு சேகரித்தார். இரவு 7.55 மணிக்கு பேசத்தொடங்கிய மோடி 8.40 மணிக்கு நிறைவு செய்தார். 45 நிமிடங்கள் பேசினார்.

Next Story