அரூர்-கோட்டப்பட்டி இடையேயான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் வாக்குறுதி


அரூர்-கோட்டப்பட்டி இடையேயான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் வாக்குறுதி
x
தினத்தந்தி 14 April 2019 10:00 PM GMT (Updated: 14 April 2019 7:59 PM GMT)

அரூர்-கோட்டப்பட்டி இடையேயான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் வாக்குறுதி அளித்தார்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் இவருக்கு ஆதரவாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வேட்பாளர் வி.சம்பத்குமார், அரூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற பகுதிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் பேசுகையில், அ.தி.மு.க.-பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அரூர் தொகுதியில் புதிய நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இதேபோன்று தீர்த்தமலை மலைக்கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். கம்பைநல்லூர் பேரூராட்சியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். அரூர்- கோட்டப்பட்டி இடையேயான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். இந்த வாக்குசேகரிப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் மதிவாணன், கம்பைநல்லூர் நகர செயலாளர் தனபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமஜெயம், மகாலிங்கம், செல்வம், நிர்வாகி ராஜூ, பா.ம.க. மாவட்ட செயலாளர் இமயவர்மன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மதியழகன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story