ஜனதாதளம் (எஸ்) கட்சியினரால் எனக்கும், எனது ஆதரவாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் - நடிகை சுமலதா பரபரப்பு குற்றச்சாட்டு


ஜனதாதளம் (எஸ்) கட்சியினரால் எனக்கும், எனது ஆதரவாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் - நடிகை சுமலதா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2019 9:45 PM GMT (Updated: 14 April 2019 11:43 PM GMT)

ஜனதாதளம் (எஸ்) கட்சியினரால் எனக்கும், எனது ஆதரவாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று நடிகை சுமலதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மண்டியா,

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் களத்தை அனலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண்டியாவில் பிரசாரம் செய்த குமாரசாமி, சுயேச்சை வேட்பாளர் சுமலதா அனுதாப ஓட்டுகளை பெற ரகசிய திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதன்படி பிரசாரத்தின் இறுதி நாளான வருகிற 16-ந்தேதி தன்னை கல்வீசி தாக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். அவ்வாறு செய்துவிட்டு ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தாக்கிவிட்டதாக நாடகமாட முடிவு செய்துள்ளார் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

ஆனால் இதனை மறுத்த சுமலதா, நான் மக்களிடம் நாடகமாட வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும் சுமலதா சார்பில், மண்டியா தேர்தல் அதிகாரியிடம் குமாரசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா பேசியதாவது:-

எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையிலும், கோபமூட்டும் வகையிலும் குமாரசாமி பேசி வருகிறார். எங்கள் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளனர். அதனால் நான் முதல்-மந்திரி குமாரசாமி மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். மேலும் எனது உயிர்க்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால், சி.ஆர்.பி.எப். (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளேன்.

நான் எனது பாதுகாப்பு விஷயத்தில் கர்நாடக போலீசாரை நம்பமாட்டேன். ஏனெனில் கூட்டணி அரசு என்ன சொல்கிறதோ அதன்படி தான் போலீசார் செயல்படுகிறார்கள். எனது ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்துகிறார்கள். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் என்னை ஆதரிக்கும் தொழில் அதிபர்களை, வியாபார நிறுவனத்தின் உரிமங்களை ரத்து செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். மேலும் குமாரசாமி தலைமையில் சிலர் மண்டியா மாவட்டத்தில் ஒரு விதமான பயத்தை உருவாக்கி வருகிறார்கள்.

மேலும் இறுதி பிரசார நாளான 16-ந்தேதி என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்கிறேன். இதனால் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story