சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 5:17 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வாகன சுங்கச்சாவடியில் பெண் ஊழியர் திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தனியார் நிறுவன அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கும் பணியில் திரிசூலத்தை சேர்ந்த அருள் என்பவருடைய மனைவி கவுரி(வயது 40) ஈடுபட்டு வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் பணியில் இருந்த கவுரி, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கவுரி மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கவுரி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தில் உள்ள அந்த தனியார் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாருடன், கவுரியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசாரிடம் கவுரியின் உறவினர்கள், “கடந்த 15 ஆண்டுகளாக கவுரி இந்த சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளது” என்றனர்.

இது தொடர்பாக முறையாக புகார் தாருங்கள். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகையை கை விட்டு கலைந்து சென்றனர்.

இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சென்னையில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் கொடுமையால் கவுரி இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கவுரியின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story