மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கலெக்டர் வீரராகவராவ் தகவல்


மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் கலெக்டர் வீரராகவராவ் தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:23 PM GMT (Updated: 16 April 2019 10:23 PM GMT)

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் கூறினார்.

ராமநாதபுரம்,

தேர்தலின்போது வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேர்தல் தளவாட பொருட்களை மண்டலம் வாரியாக பிரித்து கொண்டு செல்வதற்காக ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் உள்ள வாகனங்களை நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வீரராகவ ராவ் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவினை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கணினி முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல அந்தந்த வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான தேர்தல் தளவாட பொருட்கள் அனைத்தும் முறையே சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 28, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 26, திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 34, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 என முறையே மொத்தம் 123 மண்டல அளவிலான தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளுக்காக 1,499 காவல்துறை அலுவலர்கள், 592 ஊர்க்காவல் படையினர், 214 துணை ராணுவ படைவீரர்கள், 240 தமிழ்நாடு காவல் சிறப்பு படை பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கணினி முறை ஒதுக்கீட்டின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் தளவாட பொருட்களை வாகனத்தின் மூலம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரிடையாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடத்தில் பாதுகாப்பாக ஒப்படைப்பார்கள். இதற்காக காவல்துறையின் மூலம் ஒவ்வொரு மண்டல அளவிலான குழுவிற்கும் தலா 2 வாகனம் வீதம் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கான தளவாட பொருட்கள் அனைத்தும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறைகளில் இருந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் மண்டல அலுவலர்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சக்கர நாற்காலி வசதியுடன் சக்கர நாற்காலி இயக்குவதற்கான தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story