போடி அருகே, மலை கிராமங்களுக்கு குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்


போடி அருகே, மலை கிராமங்களுக்கு குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 5:55 PM GMT)

போடி அருகே உள்ள மலை கிராமங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன.

தேனி,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று பலத்த பாதுகாப்புடன் நேற்று எடுத்து செல்லப்பட்டன.

அதன்படி போடி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு குதிரைகளிலும், கேரள மாநிலம் வழியாக ஜீப்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. போடி அருகே குரங்கணியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் சென்டிரல் ஸ்டேஷன் எனும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 99 பேர், பெண் வாக்காளர்கள் 87 பேர் என மொத்தம் 186 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்துக்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது.

இந்த கிராமத்துக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி ஆகியவை போடியில் இருந்து குரங்கணி வரை வேனில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து சென்டிரல் ஸ்டேஷனுக்கு குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்டது. அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் நடந்து சென்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் நடந்து சென்றனர். இதேபோல், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரடி-ஊத்துக்காடு கிராமத்துக்கும் சாலை வசதி கிடையாது. இந்த கிராமத்தில் 235 ஆண் வாக்காளர்கள், 217 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 452 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்துக்கு போடியில் இருந்து பெரியகுளம் வழியாக சோத்துப்பாறை வரை வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. சோத்துப்பாறையில் இருந்து மலைப்பாதை வழியாக குதிரையில் கொண்டு செல்லப்பட்டது.

இவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் நடந்தே சென்றனர்.

Next Story