வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு


வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 April 2019 11:30 PM GMT (Updated: 17 April 2019 10:48 PM GMT)

மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும், திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் சட்டசபை தொகுதிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும், சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகள் தேனி நாடாளுமன்ற தொகுதியிலும் வருகின்றன.

இந்த 10 சட்டசபை தொகுதியில் மட்டும் மொத்தம் 25 லட்சத்து 94 ஆயிரத்து 890 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 80 ஆயிரத்து 635. பெண்கள் 13 லட்சத்து 14 ஆயிரத்து 108. திருநங்கைகள் 147 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 1,114 இடங்களில் 2 ஆயிரத்து 719 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 792 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டு, நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 13 ஆயிரத்து 545 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று இரவே வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்டனர். அதேபோல் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதே போல் ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் மத்திய போலீசார் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகின்றனர்.

அவர்களும் நேற்று இரவே வாக்குச்சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மற்றும் 200 மீட்டர் தூர எல்லைக்கான கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோட்டிற்குள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 1,600 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி விடும். தேரோட்டம் மற்றும் கள்ளழகர் நிகழ்ச்சி காரணமாக மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடக்கும். தேனி மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வழக்கம் போல் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து விடும்.

Next Story