ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர் கலெக்டர் ஈரோட்டில் வாக்குப்பதிவு செய்தார்


ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர் கலெக்டர் ஈரோட்டில் வாக்குப்பதிவு செய்தார்
x
தினத்தந்தி 18 April 2019 10:00 PM GMT (Updated: 18 April 2019 8:19 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர்-எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போட்டனர். ஈரோட்டில் கலெக்டர் கதிரவன் வாக்குப்பதிவு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் ஆர்வமாக வந்து வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களிக்க வந்தார். பின்னர் வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்தார்.

இதேபோல் அமைச்சர் கே.சி.கருப்பணன் கவுந்தப்பாடி அருகே உள்ள கே.வேலம்பாளையம் வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

பெருந்துறை அருகே தோப்புபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஓட்டுப்போட்டார். இதேபோல் அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் வாக்குச்சாவடியில் இ.எம்.ஆர். ராஜா எம்.எல்.ஏ.வும், மொடக்குறிச்சி சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கனகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு செய்தார்கள். சத்திய மங்கலம் வாக்குச்சாவ டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பூக்கடை சரவணக்குமார் ஓட்டுப்போட்டார்.

ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் ஈரோடு சம்பத்நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய சென்றார். அங்கு அவர் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஈரோடு முத்துகருப்பண்ண வீதியில் உள்ள கலைமகள் கல்வி நிலையத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய சென்றார். அங்கு அவர் அரைமணிநேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டார். அவருடைய மகன் ரத்தன் பிரத்வியும் அதே வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

ஈரோடு கிழக்கு கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. கருங்கல்பாளையம் விநாயகர்கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஓட்டு போட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி முகவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. கூட்டணிக்கு சிறந்த வரவேற்பு இருப்பதாக முகவர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒருசில வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமாகி இருக்கிறது. எனவே 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமான வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் ஓட்டு போட்டனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் தங்களது ஓட்டுகளை போட்டனர். த.மா.கா. பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் சூரம்பட்டிவலசு அம்பேத்கர் மகளிர் விடுதி வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி ராஜாஜிபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திலும், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் வைரபாளையத்தில் உள்ள அருள்நெறி திருப்பணி மன்ற மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் தங்களது ஓட்டுகளை போட்டனர்.

Next Story