சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’


சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’
x
தினத்தந்தி 20 April 2019 11:22 PM GMT (Updated: 20 April 2019 11:22 PM GMT)

சென்னையில் வரும் 24-ந் தேதி (புதன்கிழமை) சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’ என்ற அபூர்வ நிகழ்வு வானில் ஏற்படுகிறது. புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு காணப்படுகிறது.

சென்னை,

சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை காணமுடியும். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும் சூரியனின் உயரத்தையும் கணக்கிடலாம்.

அந்தவகையில் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை ‘நிழல் இல்லா நாள்’ நிகழ்வை நாம் காணமுடியும். அதேபோல் சென்னையில் வரும் 24-ந் தேதி (புதன்கிழமை) வானில் இந்த நிகழ்வு காணப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் இதேபோன்று அலகாபாத், பெங்களூரு, டெல்லி, மங்களூரு, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களிலும் இன்று காணமுடியும்.

நிழல் இல்லா நாள் குறித்து வானியல் நிகழ்வை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதுடன், செயல்விளக்கமும் அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கவும் உள்ளனர். இதேபோன்று அடுத்த நிகழ்வு வரும் ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இணை இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

அறிவியலாளர்களால் பூஜ்ஜிய நிழல் அல்லது நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நிகழ்வு 24-ந் தேதி சென்னையில் நிகழ்கிறது. பூஜ்ஜிய நிழல் நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமானதாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும். இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளைவிட்டு விலகிச் செல்லாமல் நேராக விழுகிறது.

வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். இந்த இயற்கை அதிசயம் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story