வேலூர் கோட்டையில் தீ விபத்தை தடுக்க ரூ.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிப்பு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்


வேலூர் கோட்டையில் தீ விபத்தை தடுக்க ரூ.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிப்பு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-21T21:39:12+05:30)

வேலூர் கோட்டையில் தீ விபத்தை தடுக்க ரூ.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

வேலூர் கோட்டை வேலூர் மாநகரின் மையப்பகுதியில் கம்பீரமாக அமைந்துள்ளது. இக்கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம், காவலர் பயிற்சி பள்ளி, சுற்றுலாத் துறை உள்பட பல்வேறு துறைகள் அமைந்துள்ளது. அழகிய அகழியுடன் காணப்படும் கோட்டையின் அழகை ரசிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் பலர் கோட்டைக்கு வருகை தந்து ரசித்து செல்கின்றனர்.

தற்போது பல கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டை மதில் சுவர் கீழ் உள்ள பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அவை அனைத்தும் காய்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள செடிகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் செல்வதற்கான பாதை இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கோட்டை மற்றும் மதில்சுவர் கீழ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அதை உடனே அணைக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் பைப்லைன் (குழாய்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோட்டையினுள் பல்வேறு துறை அலுவலகம் மற்றும் கோவில் உள்ளதால் தீ விபத்து ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதில்சுவர் பகுதியில் வளர்ந்துள்ள செடிகள் காய்ந்துள்ளதால் மர்ம நபர்கள் தீ வைக்கின்றனர். தீ விபத்து ஏற்பட்டால் அதை உடனடியாக அணைக்க கோட்டை முழுவதும் பைப்லைன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதற்காக ரூ.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம்’ என்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டு கோட்டை சிதில மடைய வாய்ப்பு உள்ளது. மேலும் கற்கள் அனைத்தும் தீயினால் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. இனி வருங்காலங்களில் தீ விபத்தை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கோட்டைக்கு வரும் வெளி மாவட்டத்தினர், வெளி மாநிலத்தினர் கோட்டையின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கோட்டை வளாகங்களில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கோட்டை நுழைவுவாயில் மற்றும் கோட்டை மதில் சுவர் போன்ற இடங்களில் கோட்டை எப்போது கட்டப்பட்டது, யாருடைய ஆட்சி காலங்களில் கட்டப்பட்டது. கோட்டை வளாகத்தில் என்னென்ன அலுவலகங்கள் இருந்தன, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த சிறைச்சாலை போன்றவை இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Next Story