திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 24 April 2019 10:00 PM GMT (Updated: 24 April 2019 8:50 PM GMT)

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்த கூறியதாவது:–

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் பலரும் வாய்ப்பு கேட்டனர். ஆனால் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க முடியும். அதன்படி ஆரம்ப கால தொண்டர் முனியாண்டிக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவரது கட்சி மற்றும் மக்கள் பணியினை பாராட்டி, அவருக்கு இந்த வாய்ப்பை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கு வாய்ப்பு கிடைக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவார்கள். ஆனால் அதுபற்றி எங்களுக்கு பயமில்லை. மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை புறநகர் பகுதியில் ஏராளமான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி அதிக திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மத்திய அரசின் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திருப்பரங்குன்றத்தில் வர உள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story