கோட்டக்குப்பத்தில் கடன் தர மறுத்தவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - வாலிபர் கைது


கோட்டக்குப்பத்தில் கடன் தர மறுத்தவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 24 April 2019 9:16 PM GMT)

கோட்டக்குப்பத்தில் கடன் தர மறுத்தவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வானூர்,

கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் அல்லாபிச்சை (வயது 60). இவரது மகன் நூர்முகமது. இவரும், பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்த சரத்ராஜ் (19) என்பவரும் நண்பர்கள். இந்த பழக்கத்தில் அல்லாபிச்சையிடம் சரத்ராஜ் ரூ.30 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அவரும் பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் சரத்ராஜின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அல்லாபிச்சை, அவருக்கு திடீரென்று கடன் தர மறுத்துவிட்டார். மேலும் தனது மகன் நூர்முகமதுவையும் அவருடன் பழகக்கூடாது என்று கண்டித்தார். இதனால் சரத்ராஜ் ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அல்லா பிச்சை வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. குண்டு வெடித்ததில் வீட்டின் மேற்கூரை சிமெண்டு சீட் உடைந்து சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன், தடயவியல் ஆய்வாளர் தாரா மற்றும் போலீசார் நேற்று காலை அல்லாபிச்சை வீட்டுக்கு சென்று வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் சரத்ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக அல்லாபிச்சை குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து சரத்ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர். கடன் தராத ஆத்திரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசியதாக அவர் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story