கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு


கரூர் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 8:31 PM GMT)

கரூர் வாக்கு எண்ணும் மையத்தினை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படும். இதையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்தியதுணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களுடனான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தின்போது, ஏற்கனவே உள்ளது போக மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என வேட்பாளர்களின் முகவர்கள் எடுத்துரைத்தனர். அதனை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பெடுத்து கொண்டார். இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்ட போது, வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வின் முடிவில் தான் என்ன குறை உள்ளது என்பது தெரிய வரும். அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்தார்.

கூட்டம் முடிந்ததும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் மற்றும் கலெக்டர் அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்ளிட்டோர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கார்களில் சென்றனர். அப்போது மையத்தின் வெளிப்புறத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் நடந்தே உள்ளே சென்றனர். பின்னர் வாக்கு எண்ணும் அறைக்குள் யாரும் நுழைந்து விடாதபடி அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை மற்றும் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் சுழற்சி முறை பாதுகாப்பு பணி, அனைத்து நடவடிக்கைகளும் சி.சி..டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை நீண்ட நேரமாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்தக்கூடிய நடவடிக்கை, எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்பட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடன் இருந்தனர்.

அதிகாரி ஆய்வை தொடர்ந்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறுகையில், கலெக்டர், தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கையை கலெக்டருக்கு கீழ் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து இருக்கிறோம் என்றார். 

Next Story