ஐ.எஸ். அமைப்பு பற்றி எதுவுமே தெரியாது, இலங்கை குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - ஜாமீனில் வந்தவர் பேட்டி


ஐ.எஸ். அமைப்பு பற்றி எதுவுமே தெரியாது, இலங்கை குண்டுவெடிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை - ஜாமீனில் வந்தவர் பேட்டி
x
தினத்தந்தி 26 April 2019 10:30 PM GMT (Updated: 26 April 2019 6:01 PM GMT)

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஐ.எஸ். அமைப்பு பற்றி எதுவுமே தெரியாது.இதுபோன்ற குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தி எங்களை மீண்டும் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று ஜாமீனில் வந்த வாலிபர் கூறினார்.

கோவை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (வயது 29), சம்சுதீன் (20), சலாவுதீன் (25), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (25), கோவையை சேர்ந்த முகமது ஆசிக் (26) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கும் கோவையை சேர்ந்த முகமது ஆசிக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான், எனது மனைவி, 2 மகள், ஒரு மகனுடன் கோவையில் வசித்து வருவதுடன், கறிக்கடையில் வேலை செய்து வருகிறேன். சென்னையை சேர்ந்த எனது நண்பர்கள் ரெயில் மூலம் கோவை வந்தனர். அவர்களை அழைத்துச்செல்லதான் நான் ரெயில் நிலையம் சென்றேன். ஆனால் போலீசார் எங்களை பிடித்து இந்து இயக்க தலைவர்களை கொல்ல முயற்சி செய்ததாக எங்களிடம் வாக்குமூலம் பெற்று மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு செய்தனர்.

பின்னர் 4 மாதம் கழித்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்து விசாரணை நடத்தினார்கள். தற்போது இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக எங்கள் மீது அபாண்டமான பழியை சுமத்துகிறார்கள்.

தற்போது நாங்கள் ஜாமீனில் வெளியே இருப்பதால், எங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி மீண்டும் எங்களை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் எனது செல்போனில் இருந்து எவ்வித வீடியோக்களையும் கைப்பற்ற வில்லை. மற்றவர்களிடம் இருந்து வீடியோ கைப்பற்றினார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது.

எங்கள் 7 பேரின் செல்போன்களும் தற்போது கோர்ட்டில்தான் உள்ளது. ஐ.எஸ். அமைப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. போலீசார் என்னை பிடித்த பின்னர்தான் ஐ.எஸ். என்ற அமைப்பு இருப்பதே எனக்கு தெரியும்.

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அதற்காக ஒன்றுமே தெரியாத எங்களை பிடித்து சித்ரவதை செய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக எங்களிடம் இதுவரை யாரும் விசாரணை செய்யவில்லை. அவ்வாறு விசாரணை செய்தால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story