நகைகளை கேட்டதால் ஆத்திரம், காதல் மனைவியை எரித்து கொல்ல முயன்ற டிரைவர் கைது


நகைகளை கேட்டதால் ஆத்திரம், காதல் மனைவியை எரித்து கொல்ல முயன்ற டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 27 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே நகைகளை கேட்டதால் ஆத்திரம் அடைந்து மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தொண்டி,

திருவாடானை அருகேயுள்ள கடம்பாகுடியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 27). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி இந்துமதி(22) மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த நிலையில் இந்துமதி திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து திருவாடானை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் பாலமுருகன் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் இந்துமதி கூறியிருப்பதாவது:- நாங்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு தர்ஷன் என்ற மகன் மற்றும் ஒன்பது மாத குழந்தை உள்ளது. கடந்த மாதம் எனது கணவர் பாலமுருகன் அவருடைய தங்கை பிரியா திருமணத்திற்கு என்னிடம் நகைகளை கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது எனது கணவர் பீரோவில் இருந்த என்னுடைய நகைகளை எடுத்து கொண்டு யாரோ திருடி விட்டதாக போலீசில் பொய்யான புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்து நகைகளை வீட்டின் பின்புறம் போட்டு விட்டார். இந்த நிலையில் பாலமுருகன் எனது நகைகளை அடகு வைத்து அவருடைய தங்கை திருமணத்திற்கு செலவு செய்தார். சில நாட்கள் சென்றதும் நான் அடகு வைத்த நகைகளை திரும்ப கேட்டேன். இதனால் என் மீது கோபமாக இருந்து வந்தார். இந்த நிலையில் பாலமுருகன் குடித்துவிட்டு வந்து நகைகளை கேட்கக்கூடாது என்று என்னிடம் தகராறு செய்தார்.

அப்போது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து என் மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். அதன் பின்னர் நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளும், நகையும் வேண்டுமென்றால் உண்மையை யாரிடமும் சொல்ல கூடாது என்றும் என்னிடம் கூறினார். தற்போது எனது உடல்நிலை மோசமாக இருப்பதால் உண்மையாக நடந்த சம்பவத்தை கூறி உள்ளேன். கணவர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story