எஜமானரை கடிக்க வந்த பாம்பை கொன்று உயிர் துறந்த நாய் ‘நன்றியுள்ள ஜீவன் என்பதை நிரூபித்தது’


எஜமானரை கடிக்க வந்த பாம்பை கொன்று உயிர் துறந்த நாய் ‘நன்றியுள்ள ஜீவன் என்பதை நிரூபித்தது’
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 27 April 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை கொன்று உயிரை விட்ட நாய் ‘நன்றியுள்ள ஜீவன்’ என்பதை நிரூபித்தது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 50). விவசாயி. இவருடைய மனைவி தேவகி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நடராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக பிரியம். இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் நாயை வாங்கி, அதற்கு ‘பப்பி’ என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும், அவரது குடும்பத்தினரும் வளர்த்து வந்தனர். வீட்டிற்குள்ளும், வெளியிலும் அந்த நாய் அமருவதற்கு வசதியாக தனியாக நாற்காலியும் போட்டிருந்தனர். அந்த நாற்காலியில் ‘பப்பி’ அமர்ந்து கொள்ளும். இரவு நேரங்களில் வீட்டின் வளாகத்தில் காவல் பணியை மேற்கொள்ளும். இரவில் வெளி ஆட்கள் யாராவது வீட்டின் அருகே நடமாடினாலோ அல்லது கால்நடைகள் ஏதேனும் வந்தாலோ குரைத்து தனது குடும்பத்தினரை எழுப்பி விடும்.

நடராஜன் தினமும் காலையில் தனது தோட்டத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார். நடைபயிற்சிக்கு செல்லும்போது தன்னுடன் நாய் ‘பப்பி’யையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் நடராஜன் தனது தோட்டத்துக்கு நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அவருடன் ‘பப்பி’யும் சென்றது.

நடராஜன் முன்னே நடந்து செல்ல அவருக்கு பின்னால் ‘பப்பியும் வந்து கொண்டிருந்தது. வயல் வரப்பில் சென்றபோது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வேகமாக ஊர்ந்து வந்தது. இதை பார்த்த நடராஜன் அதிர்ச்சி அடைந்ததுடன், எந்த பக்கமும் செல்லாமல் அப்படியே நின்று விட்டார். வேகமாக ஊர்ந்து வந்த நல்ல பாம்பு, நடராஜனை கடிப்பதற்காக சீறியது.

இதை அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ‘பப்பி’ பார்த்து விட்டது. உடனடியாக பாய்ந்து சென்று தனது எஜமானரை கடிக்க முயன்ற பாம்பை கடித்தது. இதனால் சில நிமிடங்கள் நாய்க்கும், பாம்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. நாயை கடிக்க பாம்பு சீறியபோது அதை நாய் கடிக்க முயற்சி செய்தது. அதைப்பார்த்த நடராஜன் தனது வீட்டிற்கு வேகமாக சென்று அங்கிருந்து ஒரு கம்பை எடுத்துக்கொண்டு பாம்பை அடித்து கொல்வதற்காக ஓடி வந்தார்.

நாயிடம் சண்டை போட முடியாத பாம்பு அங்கிருந்த முட்புதருக்குள் சென்றது. ஆனால் அதை விடாமல் நாய் விரட்டி சென்று கடித்து குதறியது. பாம்பை விடாமல் துரத்தி, துரத்தி வெறித்தனமாக நாய் கடித்ததால் நடராஜனால் அருகில் செல்ல முடியவில்லை. தொடர்ந்து நாய் கடித்து குதறியதால் பாம்பு இறந்தது.

தன்னை கடிக்க வந்த பாம்பை, நாய் கடித்து குதறி கொன்றதை பார்த்த நடராஜன், நாயை கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு நாயை அழைத்து வந்து தோட்டத்தில் நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். பாம்புடன் சண்டை போட்டபோது நாயை பாம்பு கடித்து இருந்ததால் அது சோர்ந்து போய் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடராஜனின் குடும்பத்தினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் கால்நடை மருத்துவர் வருவதற்கு முன்பாக பாம்பின் விஷம் நாய் உடம்பு முழுவதும் பரவியதால் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நாயும் இறந்து விட்டது.

தனது உயிரை காப்பாற்றிய நாய் இறந்து விட்டதே என நடராஜனும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர். குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்பட்ட நாய் இறந்ததால் நடராஜன் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர் குழி தோண்டி இறந்த நாயையும், பாம்பையும் ஒன்றாக போட்டு, பால், அரிசி ஆகியவற்றை குழிக்குள் போட்டு புதைத்தனர்.

அதே நேரத்தில் தனது எஜமானரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்த நாயின் நன்றியை எண்ணி அப்பகுதி மக்கள் பெருமிதம் அடைந்தனர்.

Next Story