மீன்பிடி தடை காலம் எதிரொலி: தஞ்சை மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்வு


மீன்பிடி தடை காலம் எதிரொலி: தஞ்சை மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்வு
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடை காலம் எதிரொலியால் தஞ்சை மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசலில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை மீன் விற்பனை கடைகள் உள்ளன. நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, கடலூர, சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதற்காக விசைப்படகுகள், பைபர்படகுகள் எனப்படும் சிறியவகை படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று பல நாட்கள் அங்கேயே தங்கி மீன்களை பிடித்து வருகின்றனர்.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு தஞ்சை போன்ற ஊர்களுக்கு விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. கடல் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில் மீன் முட்டைகள், குஞ்சுகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு வசதியாக 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் எல்லாம் கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பைபர் படகுகளில் கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன்வர்கள் மீன்களை பிடிப்பார்கள். ஆனால் பானி புயல் காரணமாக அவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தஞ்சை மீன்மார்க் கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறைந்த அளவே கடல் மீன்கள் நேற்று விற்பனைக்காக வந்திருந்தன. கிளங்கா மீன், சங்கரா, கோலா மீன், காளாகெழுத்தி, வஞ்சரை, வவ்வா, கடல் இறால், சீலா போன்ற கடல் மீன்கள் குறைந்த அளவு வந்ததால் அவற்றின் விலை அதிகரித்திருந்தது. ஆனால் அதே நேரத்தில் நாட்டு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இருந்தும், தஞ்சை மாவட்டத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்கள் விற்பனைக்காக அதிக அளவில் வந்ததால் அவற்றின் விலை குறைந்திருந்தது. மீன்கள் வரத்து குறைவால் தஞ்சை மீன்மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மீன்கள் வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டதுடன், விற்பனையும் மந்தமாக இருந்தது.

இது குறித்து சில்லறை மீன் வியாபாரிகள் கூறும்போது, ஐஸ் கெண்டை, உயிர் கெண்டை மீன்கள் தற்போது விற்பனைக்காக அதிகஅளவில் வருகின்றன. ஐஸ் கெண்டை ஆந்திராவில் இருந்தும், உயிர் கெண்டை தஞ்சை மாவட்ட பண்ணைக்குட்டைகளில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. உயிர் கெண்டை மீன் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொரவா மீன் கிலோ ரூ.300 வரையும், விரால் கிலோ ரூ.600 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

கடல் மீன்களான கிளங்கா மீன் கடந்த வாரம் 1½ கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 1 கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. சங்கரா மீன் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வவ்வா, வஞ்சரை, கொடுவா உள்ளிட்ட கடல் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடல் மீன்கள் வரத்து குறைவால் நாட்டு மீன்கள் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னர் தான் கடல்மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும். மீன்களின் விலையும் குறையும் என்றனர்.

Next Story