உசிலம்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் வந்து நகையை பறிக்க வந்த திருடர்கள் 3 பேர் சிக்கினர் துணிச்சலாக செயல்பட்ட மின் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு


உசிலம்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் வந்து நகையை பறிக்க வந்த திருடர்கள் 3 பேர் சிக்கினர் துணிச்சலாக செயல்பட்ட மின் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 29 April 2019 11:30 PM GMT (Updated: 29 April 2019 10:33 PM GMT)

உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து தனது மனைவியிடம் நகையை பறிக்க வந்த திருடர்களை துணிச்சலாக செயல்பட்டு பிடித்த மின் வாரிய ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 54). இவர் மின் வாரிய ஊழியர். இவருடைய மனைவி விஜயா. இவர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது கையில் கட்டுப் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுக்கு சிவசுப்பிரமணியம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விஜயாவிற்கு நாட்டுக்கட்டுப் போட்டு விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சிவசுப்பிரமணியம் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் மதுரை ரோட்டில் உள்ள வாலாந்து£ர் அருகே வந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2பேர் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று சிவசுப்பிரமணியத்தின் மனைவி விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றனர்.

இதில் சுதாரித்துக்கொண்ட சிவசுப்பிரமணியம் நகையை பறிக்க முயன்ற ஒரு திருடனின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதில் இருவருடைய மோட்டார் சைக்கிளும் கீழே விழந்துள்ளது. இதில் நகையை பறிக்க முயன்ற ஒருவனை சிவசுப்பிரமணியம் வசமாக பிடித்துள்ளார்.

அப்போது அந்த திருடன், தான் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு ஆயுதத்தால் தாக்கி சிவசுப்பிரமணியத்தை காயப்படுத்தியுள்ளான். ஆனாலும் அந்த திருடனை அவர் விடாமல் பிடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வாலாந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த திருடனை விசாரணைக்காக வாலாந்து£ர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிடிபட்ட திருடன் மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த பாண்டி(32), என்பது தெரிய வந்தது. இதில் பாண்டி கொடுத்த தகவலின் பேரில் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன்(25), நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த பிரதீபன்(21) ஆகிய 2 பேரும் இந்த திருட்டு முயற்சிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். துணிச்சலாக செயல்பட்டு நகை பறிக்க வந்த திருடனை பிடித்த மின் வாரிய ஊழியர் சிவசுப்பிரமணியத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story