பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் ‘திடீர்’ கைது


பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீல் ‘திடீர்’ கைது
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 30 April 2019 6:36 PM GMT)

பொள்ளாச்சி போல் பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கூறிய வக்கீலை போலீசார் திடீரென கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பொள்ளாச்சியை போன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வேலை வாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை தேடி வரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 22-ந் தேதி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடிகள் பேசிய ஆடியோவினை கடந்த 25-ந் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, 26-ந் தேதி பாதுகாப்பு கேட்டும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு மனு கொடுத்திருந்தார்.

இந்த புகார் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி உள்ளதாகவும், புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணியினர் கடந்த 25-ந் தேதி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் நலச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்களும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணியினரும் அ.தி.மு.க. பிரமுகர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் புகார் மனு கொடுத்திருந்தனர்.

ஏற்கனவே வக்கீல் அருள் அளித்த பேட்டியில், பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கண்ட புகார்கள் தொடர்பாக வக்கீல் அருள், மூத்த வக்கீல் ஒருவருடன் சேர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டியளித்து விட்டு சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் வேப்பூருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வேப்பூர் அருகே உள்ள குன்னத்தில் இருந்த வக்கீல் அருளை பெரம்பலூர் போலீசார் திடீரென்று கைது செய்து ஜீப்பில் ஏற்றி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்வதற்காக ஜீப்பில் ஏற்றியபோது, வக்கீல் அருள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தகுந்த ஆதாரங்கள் இன்றி என்னை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டப்படி வெளியே வந்து பெரம்பலூரில் நடந்த பாலியல் வழக்கை மீண்டும் சந்திப்பேன் என்றார்.

இந்த நிலையில் வக்கீல் அருள் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Next Story