பா.ஜ.க.வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும் மத்தியில் மதசார்பற்ற அரசு தான் அமையும் புதுவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேட்டி


பா.ஜ.க.வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும் மத்தியில் மதசார்பற்ற அரசு தான் அமையும் புதுவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 2 May 2019 10:00 PM GMT (Updated: 2 May 2019 7:21 PM GMT)

தேர்தல் முடிவில் பா.ஜ.க. வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். மத்தியில் மதசார்பற்ற அரசு தான் அமையும் என்று புதுவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. புதுவைக்கு நேற்று வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஐகோர்ட்டின் தீர்ப்பாக வந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்த தீர்ப்பை மதித்து கிரண்பெடி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் கிரண்பெடி பல தொல்லைகளை கொடுத்து வந்தார். கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கமாட்டார்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதன்படி அரசியல் சட்டத்துக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதற்கு உதாரணமாகத்தான் கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை உள்ளது.

கவர்னரின் நடவடிக்கையை கண்டித்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பலமுறை புகார் செய்தார். ஆனால் அதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக கவர்னர் கொல்லைப்புறமாக நியமனம் செய்தார். அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்தார். அதிகாரத்தால் பொறுப்புக்கு வந்த இந்த எம்.எல்.ஏ.க்களின் பதவியை ரத்துசெய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்பப்பெற வேண்டும்.

இலவச அரிசி, முதியோர் பென்ஷன் ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்கவேண்டும். கடந்த தேர்தலின்போது 31 சதவீத வாக்குகளையே பா.ஜ.க. பெற்றது. இப்போது அதைவிட குறைவான வாக்குகளையே பெறும். இதனால் தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு குறைந்த இடங்களே கிடைக்கும். பிரதமர் யாருக்கும் அதிகாரம் தராததால் பா.ஜ.க. அதிக இடம் பெறாது என்று சுப்பிரமணியசாமியே கூறியுள்ளார்.

எனவே மத்தியில் மதசார்பற்ற அரசுதான் அமையும். தேர்தலுக்கு பிறகுதான் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்வோம்.

தமிழக சபாநாயகர் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சபாநாயகரின் அதிகாரம் என்பது சட்டமன்றத்துக்கு உட்பட்டது. சபைக்கு வெளியே நடக்கும் எந்த சம்பவங்களுக்கும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு டி.கே.ரங்க ராஜன் எம்.பி. கூறினார்.

Next Story