மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் ஆத்திரம் கார் டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை


மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் ஆத்திரம் கார் டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 May 2019 11:15 PM GMT (Updated: 2 May 2019 9:01 PM GMT)

மணல் கொள்ளை குறித்து புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் கார் டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலேயே நடந்த இந்த துணிகர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தின் பின்புறம் காலிமனைகளும் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவரை சிலர் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டினர். அதில் அந்த வாலிபர் அதே இடத்தில் இறந்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்தவரை பார்த்து விசாரணையை தொடங்கினர். அதில் அந்த நபரை கொலை செய்தவர்கள் முகத்தை அரிவாளால் சிதைத்ததோடு 2 கைகளிலும் சரமாரியாக வெட்டியிருந்தனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் காலிமனை வழியாக திருவண்ணாமலை புறவெளிச் சாலைக்கு செல்ல பாதை உள்ளது. அந்த பாதையில் மோட்டார்சைக்கிள் ஒன்று விழுந்து கிடப்பதை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்.

அந்த பகுதியில் இருந்த முதியவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர், “3 பேர் சேர்ந்து ஒருவரை விரட்டிச்சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் சத்தம்போட்டவாறே ஓடினார். நான் பயந்து போய் அருகில் செல்ல வில்லை. பின்னர் அவர்கள் தாங்கள் விரட்டிச்சென்ற நபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என்றார்.

இதனிடையே மோட்டார் சைக்கிளில் உள்ள எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட நபர் திருவண்ணாமலை தாலுகா கிளிப்பட்டு கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் தினகரன் (வயது 35) என்பதும் சென்னையில் கார் டிரைவராக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து தினகரனின் உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டனர். அதிர்ச்சியடைந்த தினகரனின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, இறந்து கிடப்பது தினகரன் தான் என்பதை உறுதி செய்தார்.

இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணரும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து தினகரனின் உடலை போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். செய்யாறு கோர்ட்டு அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த கஜேந்திரன் மகன் அருண் (35), செல்வம் மகன் அருள் (34), திருவண்ணாமலை மேல்குண்ணுமுறிஞ்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோபி (35) ஆகியோர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “ஏரியில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக தினகரன் அடிக்கடி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளார். அந்த வகையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்கள் 3 பேரும் சேர்ந்து தினகரனை கொலை செய்து இருக்கலாம்” என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story