புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம்


புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 3 May 2019 9:30 PM GMT (Updated: 3 May 2019 7:40 PM GMT)

புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலை புதுக்கோட்டை அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தில் இருந்து தனது தீவிர பிரசாரத்தை தொடங்கினார். அந்த பகுதியில் உள்ள ஓம் காரசக்தி அம்மன் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் வேட்பாளர் மோகன் ஆகியோர் சாமி கும்பிட்டனர். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குலையன்கரிசல் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து குலையன்கரிசல், போடம்மாள்புரம், கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், முடிவைத்தானேந்தல், வாகைகுளம், வர்த்தகரெட்டிபட்டி, திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், மேலகூட்டுடன்காடு ஆகிய பகுதிகளில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கி வருகிறது. எப்போதும் திண்ணையில் இருக்கும் மக்களின் அன்பை பெற்ற வேட்பாளர் மோகன். இங்கு அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பொதுமக்களுக்கு ஆளும் அரசுதான் நலத்திட்டங்களை கொடுக்க முடியும் என்று கூறினார்.

பிரசாரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தமிழக வீட்டு வசதி துறை தலைவர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசும் போது, ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர் மோகன் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை அப்படியே வழிநடத்தி செல்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் சாதாரண முதல்வராக இருந்தாலும், முடிவு எடுப்பதில் வலிமையான முதல்வராக இருக்கிறார் என்று கூறினார்.

Next Story