23–ந் தேதிக்கு பிறகு தி.மு.க. ஆட்சி மலரும்; திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
வருகிற 23–ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலரும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணுக்கு ஆதரவாக நேற்று மாலை தீவிர பிரசாரம் செய்தார். விளாச்சேரில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவர் திருநகர், அவனியாபுரம், பெருங்குடியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஆதரவு கேட்டு பேசினார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
உங்களை தேடி வந்திருக்கிறேன். நாடி வந்திருக்கிறேன். ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஏதோ தேர்தலுக்காக மட்டும் நாங்கள் வந்து ஆதரவு கேட்பவர்கள் அல்ல. எப்போதும், எந்த நிலையிலும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள் நாங்கள். அந்த உணர்வோடுதான் வந்திருக்கிறோம்.
இது இடைத்தேர்தல். இடையிலே வந்திருக்கக்கூடிய தேர்தல். ஏற்கனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து அ.தி.மு.க.வின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் உடல் நலிவுற்று மரணம் அடைந்துவிட்டார். ஏ.கே.போஸ் கடந்த முறை தேர்தலில் நின்ற போது ஒரு சூழ்ச்சி செய்தார். அதனால் தான் நமது வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்திற்கு போனார். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருக்கும் போதுதான் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அவர் உயிரோடு இருந்தாரா, உயிரற்று இருந்தாரா, சுயநினைவோடு இருந்தாரா, சுய நினைவு இல்லாமல் இருந்தாரா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர் மரணம் கூட ஒரு மர்மமாகவே இருக்கிறது.
ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் போது, அந்த கட்சியின் சின்னம் அவருக்கு வழங்க வேண்டுமென்றால் அந்த கட்சியின் தலைவர்தான் கையெழுத்து போட்டு படிவம் தர வேண்டும். அதே போல் ஏ.கே.போஸ் போட்டியிடும் போது ஜெயலலிதா கையெழுத்து போட்டு தந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா கையெழுத்து போட வில்லை. அவரால் கையெழுத்து போட முடியாத நிலை. எனவே அவர் கைரேகை வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த கைரேகை அவர் சுயநினைவோடு இருக்கும் போது தான் வைத்தாரா? என்பதுதான் கேள்விக்குறி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா சுயநினைவோடு கைரேகை வைக்கவில்லை என்று கூறி ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு சொல்லி உள்ளது.
ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்ற சரவணன்தான் இப்போது தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் மோடி, இனி பிரதமராக வரவேண்டியவர் இல்லை என்பதற்காக மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை 23–ந் தேதி முடிந்தவுடன் மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்ற செய்தி வரத்தான் போகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்கு பிரச்சினை வந்த போது 18 எம்.எல்.ஏ.க்ளை பதவி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார்கள்.
22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் 23–ந் தேதி தெரிந்து விடும். அன்று மோடி வீட்டுக்கு போவது போல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார். ஏனென்றால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இப்போது 97 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 22 சட்டசபை இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெற போகிறோம். எனவே 97–உடன், 22ஐ சேர்த்தால் 119 கிடைத்து விடும். எனவே அப்போது தி.மு.க ஆட்சி தான்.
ஜாடிக்கு ஏற்ற மூடி. மூடிக்கு ஏற்ற ஜாடி என்பது போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி. எடப்பாடிக்கு ஏற்ற மோடி. இவர்கள் 2 பேரும் அவுட். இந்த உண்மையை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டு, ஏற்கனவே 18 பேரை தகுதி நீக்கம் செய்தது போல் 3 பேர் பதவியை பறிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 234–ல் 3ஐ கழித்தால் 231. அதை வைத்து கொண்டு ஆட்சியில் இருந்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் பாச்சா எல்லாம் பலிக்காது. அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கு மோடி தான் காரணம். மோடியே ஆட்சியில் இல்லாவிட்டால் எடப்பாடி எப்படி நீடிக்க முடியும்? ராகுல்காந்தி தான் பிரதமராக வந்து அமர போகிறார். அப்போது எடப்பாடி காலி தான்.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டீர்கள். ஆனால் இந்த ஆட்சியில் ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதனை முதலில் நான் சொல்லவில்லை. சொன்னது ஓ.பன்னீர்செல்வம் தான். ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று பன்னீர்செல்வத்திற்கு 6 முறை சம்மன் கொடுத்தார்கள். ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. எனவே இந்த விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சர் ஆனார். ஆனால் அவரது பதவியை சசிகலா பிடுங்கி விட்டு, தான் முதல்–அமைச்சர் ஆக திட்டமிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து விட்டது. எனவே யாரை முதல்–அமைச்சராக போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது சசிகலா காலில் ஏதோ தவழ்ந்து வந்தது. அது வேறுயாருமல்ல எடப்பாடி பழனிசாமி தான். அவ்வளவு பவ்யம். மண் புழு போல தவழ்ந்து வந்தார். உடனே அவர் நான் மண்புழு தான். விவசாயிகளுக்கு பயன்படுவேன் என்றார். மண்புழு மண்ணுக்குள் தான் தவழ்ந்து போகும். ஆனால் நீங்கள்?
வருகிற 23–ந் தேதி பிறகு மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி மலரும். அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை ஜெயலில் போடுவது தான் எனது முதல் வேலை. இதை நான் சொல்லும் போது எல்லாம் அ.தி.மு.க. தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களே எங்களிடம், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தான் ஜெயலலிதா சாவில் உள்ள மர்மம் விலகும் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கோடநாடு கொலை, பொள்ளாச்சி சம்பவம் ஆகியவை குறித்தும் முழுமையாக விசாரிக்கப்படும்.
பெரம்பலூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., வேலை வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி பெண்களை வரவழைத்து தனது அலுவலகத்திலேயே அசிங்கப்படுத்தி போட்டோ–வீடியோ எடுத்து மிரட்டுகிறார். இது குறித்து வக்கீல் போலீசிடம் புகார் கொடுத்தார். ஆனால் அந்த வக்கீலை பிடித்து உள்ளே வைத்து விட்டார்கள். இது போன்ற அக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இதனை நான் பண்போடு, பாசத்தோடு, உரிமையோடு, உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த இந்த ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.