விழுப்புரம் அருகே செல்போன் கடை ஊழியரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது


விழுப்புரம் அருகே செல்போன் கடை ஊழியரிடம் பணம் பறிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 3:30 AM IST (Updated: 4 May 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே செல்போன் கடை ஊழியரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

திருக்கோவிலூர் தாலுகா ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முரளிதரன் பணியை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் கப்பூர் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென முரளிதரனை வழிமறித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து முரளிதரன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டன்(21), கோனூரை சேர்ந்த மதியழகன்(21) ஆகியோர் முரளிதரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன், மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story