தஞ்சை பெரியகோவில் அருகே ஆற்றங்கரையில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் கரிகால்சோழன் நடைபாதை பூங்கா


தஞ்சை பெரியகோவில் அருகே ஆற்றங்கரையில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழும் கரிகால்சோழன் நடைபாதை பூங்கா
x
தினத்தந்தி 4 May 2019 10:30 PM GMT (Updated: 4 May 2019 7:55 PM GMT)

தஞ்சை பெரியகோவில் அருகே ஆற்றங்கரையில் உள்ள கரிகால்சோழன் நடைபாதை பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. இங்குள்ள இருக்கையும் சேதப்படுத்தப்பட்டு கிடக்கிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உலக பிரசித்தி பெற்ற, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம், சிவகங்கை பூங்கா, மணி மண்டபம் போன்றவை உள்ளன. தஞ்சைக்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இதில் தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அப்போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தஞ்சை இர்வீன் பாலத்தில் இருந்து நாகை சாலையில் உள்ள பாலம் வரை புதுஆற்றின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகள், மின் விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஆங்காங்கே செடிகளும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கரிகால்சோழன் நடைபாதை

இதையடுத்து தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பாலத்தில் இருந்து, இர்வீன் பாலம் வரை புதுஆற்றின் இருபுறமும் நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபாதையும், பெரியகோவில் அருகே உள்ள பாலம் அருகே பூங்காவும் அமைக்கப்பட்டது. இந்த நடைபாதைக்கு கரிகால்சோழன் நடைபாதை என பெயர் வைக்கப்பட்டது. இந்த நடைபாதை பணி முடிந்து கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது இந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பெரியகோவில் பாலம் அருகே உள்ள பூங்கா தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இங்கு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சமூக விரோத செயல்கள்

இங்கு மது அருந்துபவர்கள், மதுபானங்களை அருந்தி விட்டு காலி பாட்டில்களை அங்குள்ள பூங்காவில் போட்டுள்ளனர். இது தவிர நடைபாதைகளிலும் பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்களாகவே காட்சி அளிக்கிறது. இங்கு நடைபயிற்சி செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.

பூங்காவில் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருப்பதால் இது சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக போய் விட்டது. மேலும் தற்போது பூங்காவில் போடப்பட்டு இருந்த புல்தரைகள், செடிகள் கருகி காணப்படுகின்றன. மேலும் பூங்காவில் பொதுமக்கள் அமருவதற்காக போடப்பட்டு இருந்த இருக்கைகளும் சேதப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சில நேரங்களில் மது அருந்துபவர்கள் பூங்கா அருகில் உள்ள பாலம் பகுதியில் அருந்தி விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். சில நேரங்களில் குடித்து விட்டு தகராறிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் கோவிலுக்கு செல்பவர்கள் முகம் சுழித்த வண்ணம் செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பூங்காவை பராமரிப்பதோடு, விளக்கு வசதிகளும் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story