கூடலூரில் பரபரப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து, சிலிண்டர்கள் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்


கூடலூரில் பரபரப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து, சிலிண்டர்கள் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 10:23 PM GMT)

கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.

கூடலூர்,

கூடலூரில் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் பஸ்நிறுத்தம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகாதார நிலையத்தில் 4 டாக்டர்கள், 2 மருந்தாளுனர்கள் பணிபுரிகின்றனர்.

கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு சிகிச்சை பிரிவு, கருத்தடை அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்படுகின்றன. இதனால் சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இங்கு வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் நேற்று காலை முதல் நோயாளிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் சுகாதார நிலைய வளாகத்தில் மருந்துகள் இருப்பு வைத்திருந்த அறையில் திடீரென்று தீப்பிடித்தது. சற்று நேரத்தில் அந்த அறையின் ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேற தொடங்கியது. அங்கு வைக்கப்பட்டு இருந்த மருந்து பொருட்கள் மீது தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. மேலும் அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த 15 ஆக்சிஜன் சிலிண்டர்களில் 4 சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

உடனே அருகில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருந்த பெண் நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்களும் பதறியடித்து சுகாதார நிலைய வளாகத்தின் முன்பகுதியில் கூட்டமாக கூடினர். தீ விபத்து குறித்து கம்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அறையில் கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கும் எந்திரத்தை இயக்கி பார்த்துள்ளனர். பின்னர் அதனை அங்கே வைத்து விட்டு சென்றனர்.அந்த எந்திரத்தில் இருந்து கொசு மருந்து கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாகவும், அருகில் இருந்த மண்எண்ணெய், பெட்ரோல் மூலம் தீ வேகமாக பரவி ஆக்சிஜன் சிலிண்டர்களில் பிடித்ததில், 4 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதும் தெரியவந்தது. சுகாதார நிலையத்தில் சிலிண்டர்கள் வெடித்து தீப்பிடித்ததாக அப்பகுதியில் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story