மயிலாடுதுறை அருகே, மின்சாரம் தாக்கி சப்-இன்ஸ்பெக்டர் சாவு - மகன் கண் எதிரே பரிதாபம்


மயிலாடுதுறை அருகே, மின்சாரம் தாக்கி சப்-இன்ஸ்பெக்டர் சாவு - மகன் கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 5 May 2019 6:59 PM GMT)

மயிலாடுதுறை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகன் கண் எதிரே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை, 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது56). இவருடைய மகன் பிரதீப் (29). ராமமூர்த்தி தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த சில நாட்களாக ராமமூர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர் மாலை 6 மணி அளவில் மகன் பிரதீப்புடன், தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள கொடியில் துணிகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொடிக்கு மேலே சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக ஈரத்துணி ஒன்று உரசியது. இதன் காரணமாக ராமமூர்த்தியை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை பிரதீப் காப்பாற்ற முயன்றார். இதனால் பிரதீப்பையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயங்களுடன் இருந்த அவருடைய மகன் பிரதீப்பை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகன் கண் எதிரே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story