தினகரனுக்கு எதிராக செயல்படுகிறார்: தங்கதமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் இணையப்போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்


தினகரனுக்கு எதிராக செயல்படுகிறார்: தங்கதமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் இணையப்போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 7:21 PM GMT)

தினகரனுடன் இருந்து கொண்டே அவருக்கு எதிராக செயல்படும் தங்கதமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் இணையப் போகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பல்வேறு இயக்கங்களின் உள்ள இளைஞர்கள் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இளைஞர்கள் வருவதை அ.தி.மு.க. இருகரம் கூப்பி வரவேற்கிறது. தி.மு.க.வில் வாரிசுகளுக்குத்தான் பதவி கொடுப்பார்கள். நாடாளுமன்ற தொகுதியில் பார்த்தோம் என்றால் 20 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வாரிசுகளுக்கு தான் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த கட்சியில் எதிர்காலம் இருக்காது என்று நினைத்த இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வுடன் இணைத்துள்ளனர். அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். அதில் மாற்று கருத்து எதுவுமில்லை. ஏற்கனவே பல தேர்தலில் தனித்து நின்று அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் தோழமை கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுவதின் மூலமாக மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.

தினகரன் கட்சியைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய இயக்கமாக பார்க்கப்படவில்லை. அவர்களுக்கு எல்லா ஊர்களிலும் கிளைகள் கிடையாது. ஆங்காங்கே ஒரு சில கிளைகள் இருக்கிறது. சில இளைஞர்களை ஆசை வார்த்தை கூறி, பதவி கொடுப்பதாக தெரிவித்து ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அது எல்லாம் நிலைத்து இருக்காது. ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லை. கட்டப்பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று இந்த ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அடிப்படையில் அவருக்கு எந்தவிதமான எதிர்கால திட்டமும் கிடையாது. மு.க.ஸ்டாலின் உழைப்பின் மூலமாக உயரவில்லை. வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் பதவிக்கு வந்துள்ளார். அ.தி.மு.க.வில் தலைவர்கள் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளனர். ஸ்டாலின் குறுக்கு வழியில் யாரையாவது பயன்படுத்தி, அதாவது தற்போது தினகரனை பயன்படுத்தி அவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேரை தூண்டி இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைக்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது.

தங்கதமிழ்ச்செல்வனுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர் தினகரன் பக்கத்தில் இருந்து இருந்து கொண்டு அவருக்கு எதிராக பேசிக் கொண்டு, செயல்பட்டு வருகிறார். தினகரனின் வளர்ச்சிக்கோ, அவருக்கு ஆதரவாகவோ தங்கதமிழ்ச்செல்வன் எதுவும் கூறவில்லை. அவருடைய கருத்துகள் அனைத்தும் அவர் தி.மு.க.விற்கு செல்ல போவதையே காட்டுகிறது. செந்தில் பாலாஜிக்கு அடுத்ததாக தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் இணையப்போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story