திருச்சியில் அ.ம.மு.க. பிரமுகர் கொலை: ஒருதலை காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலம் மாணவியின் சகோதரர் உள்பட 2 பேர் கைது
திருச்சியில் ஒரு தலைகாதல் விவகாரத்தில் அ.ம.மு.க. பிரமுகரை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக மாணவியின் சகோதரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பள்ளிவாசல்தெருவை சேர்ந்தவர் காதர் உசேன். ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் ஜாவித் உசேன்(வயது 24). இவர் திருச்சி பொன்மலை பகுதி அ.ம.மு.க.வின் சிறுபான்மைபிரிவு செயலாளராக இருந்தார்.
டிப்ளமோ முடித்த ஜாவித்உசேன், சென்னை ஐ.சி.எப்.பில் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக காத்து இருந்தார். இதற்கிடையே பொன்மலை பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை ஜாவித்உசேன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது மாணவியை அவர் பின்தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த மாணவியின் சகோதரர் கமலக்கண்ணன், அவரது நண்பர் சரவணக்குமார்(19) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாவித்உசேனை சந்தித்து தட்டி கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜாவித்உசேன், இறைச்சி வாங்க மேலகல்கண்டார்கோட்டையில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கமலக்கண்ணன், சரவணக்குமார் ஆகியோர் ஜாவித்உசேனை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்த னர். அப்போது மாணவியின் சகோதரர் கமலக்கண்ணன், அவரது நண்பர் சரவணக்குமார் ஆகியோர் ஜாவித்உசேனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில், ஒருதலைக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story